×

48 ஏக்கர் பரப்பு கொண்ட வாலாந்தரவை ரயில்வே ஸ்டேஷனை தரம் உயர்த்த வேண்டும்: பயணிகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள்

ராமநாதபுரம், செப்.27: சுமார் 48 ஏக்கர் நிலப்பரப்புள்ள வாலாந்தரவை ரயில்வே ஸ்டேஷனை அனைத்து வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும். அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ராமேஸ்வரம், பாம்பன்,மண்டபம், மண்டபம் முகாம், உச்சிப்புளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ளன. மீட்டர்கேஜ் ரயில் பாதையாக இருந்த காலக்கட்டத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் நிறுத்தப்பட்ட ஒரு பிரதான ஸ்டேஷனாக வாலாந்தரவை இருந்தது. 1984 கால கட்டத்தில் ராமேஸ்வரம்-சென்னை சேது எக்ஸ்பிரஸ் தவிர மதுரை, திருச்சி பாசஞ்சர் ரயில்கள்,கோவை பாஸ்ட் பாசஞ்சர் ரயில்கள் வாலாந்தரவையில் நின்று சென்றன.

இதே காலக்கட்டத்தில் தங்கச்சிமடம், பிரப்பன்வலசை, பெருங்குளம், அச்சுந்தன்வயல், பாண்டிக்கண்மாய், கமுதக்குடி ஆகிய ஸ்டேஷன்களில் ஒரு சில ரயில்கள் நின்று சென்றன. இது அப்பகுதி கிராமப்புற மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை ரயில்வே ஸ்டேஷன் சுற்று வட்டார கிராம மக்களின் ரயில் போக்குவரத்திற்கு வாலாந்தரவை ரயில் ஸ்டேஷன் தொடங்கி காலம் தொட்டு தற்போது வரை பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. ஆக.12 2007ம் ஆண்டு ராமேஸ்வரம்- மானாமதுரை இடையே அகல ரயில் பாதை போக்குவரத்து தொடங்கியதால், வாலாந்தரவை உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் நிலைமை தலைகீழாக மாறியது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன்கள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டன. ஆனால் அந்தளவிற்கு தரம் உயர்த்தப்பட்டிருப்பதாக ரயில் பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.

தங்கச்சிமடம், பாண்டிக் கண்மாய், கமுதக்குடி ஸ்டேஷன்கள் மூடப்பட்டன. எஞ்சிய ஸ்டேஷன்களில் டிக்கெட் விற்பனை ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டதால், இந்த ஸ்டேஷன்களில் ஒரு சில ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. எரிவாயு சூழலி மின் உற்பத்தி திட்டம், ஓஎன்சிசி உள்ளிட்ட நிறுவனங்கள், 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் மையப்பகுதியான வாலாந்தரவை ரயில்வே ஸ்டேஷன் ஒப்பந்த நிலையமாக மாற்றப்பட்டதால், மதுரை, திருச்சி பாசஞ்சர் ரயில்கள் மட்டும் நின்று செல்லும் கண்காட்சி ஸ்டேஷனாக காணப்படுகிறது. கொரோனா பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பின் திருச்சி பாசஞ்சர் பயணிகள் ரயில் நிறுத்த அட்டவணையில் வாலாந்தரவை நீக்கப்பட்டுள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையை போக்க வாலாந்தரவை ரயில்வே ஸ்டேஷனை தரம் உயர்த்த வேண்டும். கடந்த காலங்களை போல் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில் பாதைகள் அனைத்தும் தற்போது மின்மயமாக்கப்பட்டு வருவதால், ராமநாதபுரம் வரை நிறைவடைந்த மின் மயமாக்கல் பணியில் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரயில் இன்ஜின் திருப்புவதற்கு வசதியின்மையால் மின் மயமாக்கல் பணி தற்போது கிடப்பில் உள்ளது. ராமநாதபுரத்திலிருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ள வாலாந்தரவை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் 48 ஏக்கர் நிலம் ரயில்வேக்கு சொந்தமாக உள்ளதால், இந்த ஸ்டேஷனை தரம் உயர்த்தி மின்மயமாக்கி ரயில் இன்ஜின்கள் திருப்ப பயன்படுத்தலாம். ராமேஸ்வரம்- சென்னை இடையே பகல் நேர ரயில் இயக்கி வாலாந்தரவையிலும் நின்று செல்லுமானால், கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரயில் பயணிகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Valandarawai ,
× RELATED 48 ஏக்கர் பரப்பு கொண்ட வாலாந்தரவை...