×

பஸ்சில் ஏறிய பெண்ணிடம் நகையை அபேஸ் செய்த இரண்டு பெண்கள் கைது

மானாமதுரை, செப்.27: மானாமதுரை புது பஸ்ஸ்டாண்டில் அரசு பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் நகையை திருடிய இருவர் கையும் களவுமாக பிடிபட்டனர். திருநெல்வேலியை சேர்ந்தவர் மாலா. இவர் நேற்று மானாமதுரை வழியாக மதுரைக்கு செல்ல அரசு பஸ்சில் ஏற முயன்றார். மாலா தான் வைத்திருந்த கட்டை பையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கசங்கிலி வைத்திருந்தார். இதை நோட்டமிட்ட இருபெண்கள் கூட்ட நெரிசலில் ஏறுவது போல் மாலாவின் கட்ட பையில் உள்ள தங்கச் சங்கிலியை திருடினர்.பஸ்சினுள் ஏறிய மாலா டிக்கெட் எடுப்பதற்காக கை பையை தேடிய போது தான் வைத்திருந்த நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.

பஸ் தனியாக நிறுத்தப்பட்டு பயணிகளிடம் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது பஸ் ஸ்டாண்டில் டீக்கடையில் வேலை செய்து வரும் முருகன் என்பவர் பஸ்சை விட்டு இறங்க முயன்ற இருபெண்களை பிடித்து சோதனையிட்டார். அப்போது அந்த பெண்களிடம் மாலாவின் கைப்பை இருந்துள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த மானாமதுரை போலீசார் அவர்கள் இருவரையும் விசாரித்தபோது, அறந்தாங்கியை சேர்ந்த லெட்சுமி(55), மதுரை தெப்பக்குளத்தை சேர்ந்த வள்ளி(54) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED முதல்வரின் மருத்துவ காப்பீட்டு...