சிவகாசியில் மழை காலங்களில் வீணாகும் மழைநீரை சிறுகுளம் கண்மாயில் தேக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சிவகாசி, செப். 27: சிவகாசியில் மழை காலங்களில் வீணாகும் மழை நீரை, தடுப்பணை அமைத்து சிறுகுளம் கண்மாயில் தேக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி மாநகராட்சியில் உள்ள பெரியகுளம், சிறுகுளம் கண்மாய் ஆகியவை முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கோடை காலங்களில் மாநகராட்சியில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. வீடுகளில் இருக்கும் போர்வெல் கிணறுகளிலும், கோடை காலங்களில் நீர்மட்டம் குறைந்து விடுகிறது. மாநகரில் உள்ள பெரும்பாலான நீர்நிலை ஆதாரங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதனால், மழை நீரை தேக்க முடியவில்லை. ஆனால்,மழை காலங்களில் நகரில் சாலை, வீடுகளில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது.

நீர்நிலை ஆதாரங்கள் அனைத்தும் மூடப்பட்டதாலும், நீர்ப்போக்கு இடங்களில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிகரித்துள்ளதாலும், மழை நீர் வீணாகி வருகிறது. நகரில் உள்ள ஞானகிரி ரோடு, காரனேசன் காலனி, எஸ்எப்ஆர் பெண்கள் கல்லூரி பகுதி, இரட்டை சிலை தெரு, 56 வீட்டு காலனி ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீர், காரனேசன் விலக்கு பகுதியில் சங்கமித்து காய்ச்சல்காரம்மன் கோயில் வாறுகால் வழியாக சென்று, கிருதுமால் ஓடையில் கலந்து மீனம்பட்டி கண்மாய் சென்றடைகிறது. இதனால், மழை நீர் வீணாகி வருகிறது.

தடுப்பணை அமைக்க வேண்டும்:

இந்த மழை நீரை காரனேசன் விலக்கில் ஒரு தடுப்பணை அமைத்து, 100 மீட்டர் தூரத்தில் உள்ள சிறுகுளம் கண்மாயில் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை இல்லா காலங்களில் தடுப்பணை ஷட்டரை அடைத்து கழிவுநீர் கிருதுமால் ஓடைக்கு செல்லும் வகையில், ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம், மழை காலங்களில் பெருக்கெடுத்து வரும் மழைநீரை சிறுகுளம் கண்மாயில் தேக்க முடியும். எனவே, மாநகராட்சி நிர்வாகம் தொலை நோக்கு சிந்தனையோடும், நகரின் நீர்நிலை ஆதாரங்களை பாதுகாத்திடும் வகையிலும், இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகரில் நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஊருணிகள், தெப்பம் ஆக்கிரமிப்பால் அழிந்து வருகின்றன. காரனேசன் பகுதி விலக்கில் தடுப்பணை அமைத்து வீணாகி வரும் மழை நீரை, சிறுகுளம் கண்மாயில் தேக்கினால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். இந்த திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: