100 ரூபாய் கூடுதலாக கூலி வாங்கியதால் ஆத்திரம் 3வது மாடியில் இருந்து கீழே தள்ளி கட்டிட தொழிலாளி படுகொலை: தவறி விழுந்ததாக நாடகமாடிய 3 பேர் சிசிடிவி கேமரா பதிவு மூலம் சிக்கினர்

வேளச்சேரி: தி.நகர் சிஐடி நகர்  அருகே தனியார் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.  இங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தன் (22), சக்திவேல் (25), பிரசாந்த் (25) ஆகியோர் வேலை செய்து வந்தனர். ஆனந்தன்  சென்ட்ரிங் வேலை செய்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை இவர்கள் வேளச்சேரியில் தங்கி கட்டுமான வேலை செய்து வரும் அதே மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரை பார்க்க சென்றனர். அங்கு, இவர்கள் 3வது மாடியில்  ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது இவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், ஆனந்தனிடம் அருகில் இருந்த தென்னை மரத்தில் இருந்த தேங்காயை காண்பித்து பார்க்க சொன்னார்கள். போதையில் இருந்த அவர், மாடி ஓரம் வந்து தேங்காயை பார்க்க முயன்றார். அப்போது, அருகில் இருந்த 3 பேரும் மாடியில் இருந்து அவரை கீழே தள்ளி விட்டனர்.

இதில், படுகாயமடைந்த ஆனந்தன், உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த  வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதையடுத்து, 3 பேரும் கீழே இறங்கி வந்து, அங்கிருந்த தொழிலர்களிடம், மாடியில் இருந்து, ஆனந்தன் தவறி கீழே  விழுந்துவிட்டதாக  கூறினர். உடனே, அவர்கள் மயங்கி கிடந்த  ஆனந்தனை மீட்டு, அதேபகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆனந்தன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து, சக தொழிலாளர்களான சக்திவேல் (25), பிரசாந்த் (25), சீனிவாசன்(25) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மாடியில் இருந்து ஆனந்தன் கீழே விழுவதும், பின்னர், இவர்கள் மூவரும் மாடியில் இருந்து கீழே சாவகாசமாக இறங்கி வந்து,  ஆனந்தனின் வாயில் மது ஊற்றுவது பதிவாகி  இருந்தது. உடனே அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஆனந்தனை திட்டமிட்டு கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடியதை ஒப்புக்கொண்டனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது: மேஸ்திரி ஆறுமுகம் என்பவர் சக்திவேல், பிரசாந்தை விட,   ஆனந்தனுக்கு  கூடுதலாக ரூ.100  கூலி கொடுத்ததும்,  உங்களைவிட ஆனந்தன் பலமணி நேரம் நன்றாக வேலை செய்கிறார். நீங்கள் ஒழுங்காக  வேலை செய்யவில்லை என திட்டியுள்ளார்.

அதனால், ஆத்திரமடைந்த அவர்கள், ஆனந்தனிடம், நீ சரியாக வேலை செய்யாதே எனக் கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சக தொழிலாளி  சீனிவாசனுடன் சேர்ந்து, சம்பவத்தன்று ஆனந்தனை மதுகுடிக்க வைத்ததும், அவருக்கு போதை தலைக்கேறிய நிலையில்,  மாடியில் இருந்து அவரை தள்ளி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேல், பிரசாந்த், சீனிவாசன் ஆகியோரை கைது செய்த போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: