மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ரூ500 கோடியில் 2.53 லட்சம் பேருக்கு சிகிச்சை

சேலம், செப். 24: சேலம் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் 2.53 லட்சம் பயனாளிகளுக்கு ரூ500 கோடி சிகிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது பொதுமக்களின் வரவேற்பை பெற்று கவனம்  ஈர்த்துள்ளது. தமிழகத்தில் ஏழை, எளிய மக்களும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் உயர்தர சிகிச்சை கிடைக்கும் வகையில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கடந்த 2009ம் ஆண்டு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தார்.

இந்த திட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், பரிசோதனைகள், ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் உயர்தர சிகிச்சைகள் கிடைத்தது. இதையடுத்து பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் கடந்த 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டமானது தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்துடன் இணைக்கப்பட்டு ₹5லட்சம் வரை மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 1,513 சிகிச்சை முறைகள்  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

8சிறப்பு உயர் சிகிச்சை முறைகளும், 52 முழுமையான பரிசோதனை முறைகளும், 11 தொடர் சிகிச்சை முறைகளும் இதில் அடங்கியுள்ளது. இந்த திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த 2009ம் ஆண்டு முதல் இதுவரை 1.19 கோடி பயனாளிகளுக்கு ₹10,835 கோடி மதிப்பிலான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ‘இன்னுயிர் காப்போம்-நம்மைக்காக்கும் 48’ என்னும் திட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே 48 மணி நேரம் வரை 81 வகை சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

இந்த 48 மணி நேரத்திற்கும் பிறகும் விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தாலோ, தொடர் சிகிச்சை முறைகள் தேவைப்பட்டாலோ, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட பயனாளிகளாக இருந்தால் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை தொடரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி முதல் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கி நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்தை முன்னிட்டு, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் (பொ) தனபால், தரண் மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோருக்கு, கலெக்டர் கார்மேகம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அப்போது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன், காப்பீட்டு திட்ட அலுவலர் முரளி ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 63 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இந்த திட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 2,53,096 பயனாளிகளுக்கு ₹500.58 கோடி காப்பீட்டு தொகையில் பயனடைந்துள்ளனர்.

மேலும், 6,31,487 குடும்பங்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ₹1.20 லட்சம் மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் பயனடையலாம்.  முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற ஆண்டு வருமானச் சான்று ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்றுக்கொண்டு பயன்பெறலாம்,’’ என்றார்.

Related Stories: