நீர்வழிப்பாதைகளை பயன்படுத்தி காவிரி-சரபங்கா உபரிநீர் திட்டம்

சேலம், செப்.24: காவிரி-சரபங்கா உபரிநீர் திட்டத்தை ஏரிகளுக்கிடையே உள்ள பழைய நீர்வழிப்பாதைகளை பயன்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா முன்னிலை வகித்தார். வேளாண் பொறியியல் துறை சார்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த வேளாண் இயந்திரங்களை கலெக்டர், விவசாயிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து, மீன் வளத்துறை சார்பில் பண்ணை குட்டை அமைத்து மீன் வளர்ப்பு மேற்கொள்வது குறித்து மீன்வளஆய்வாளர் கலைவாணி எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் செந்தாரப்பட்டி விவசாயி செந்தில் பேசுகையில், ‘‘மண்மலை ஊராட்சியில் விவசாயம் பாதிக்கும் வகையில் தனியார் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து ஆலை, கிரஷர் ஆலை, கல்குவாரி அமைக்கின்றனர். அதனை தடுத்து நிறுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். எங்கள் பகுதியில் இருந்து தான், மாவட்டத்திலேயே அதிகளவு பால் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. கால்நடை வளர்ப்பையும் அந்த ஆலைகள் பாதிக்கச் செய்கிறது. எனவே அவை தேவையில்லை,’’ என்றார். அதற்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி எழுந்து, வறண்ட பகுதி என்பதால் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேட்டூர் விவசாயி செல்வராஜ் பேசுகையில், ‘‘காவிரி-சரபங்கா உபரிநீரேற்றும் திட்டத்தில் இயற்கையாக ஒரு ஏரியில் இருந்து மற்றொரு ஏரிக்கும் இருக்கும் நீர்வழிப்பாதைகளை பயன்படுத்தி, தண்ணீரை கொண்டுச் செல்ல வேண்டும். ஆனால் அதிகாரிகள், பட்டா நிலங்களில் கால்வாய் அமைக்கவும், குழாய் பதிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், மரங்கள் அழிக்கப்படும். ஆகவே பழைய நீர்வழிப்பாதைகளை பயன்படுத்தி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,’’ என்றார். இதே கருத்தை மேட்டூர், இடைப்பாடி, ஜலகண்டாபுரம், ஓமலூர் பகுதி விவசாயிகள் பலரும் தெரிவித்தனர்.

வாழப்பாடி விவசாயி பாலச்சந்திரன் பேசுகையில், ‘‘உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் எடுக்கும் இடங்களில் மரங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை இன்னும் நிர்ணயிக்கவில்லை. முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும் கூறுகிறீர்கள். ஆனால் இதுவரையில் அத்தகைய கூட்டத்தை நடத்தவில்லை. அதனால் விரைந்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கச் செய்ய வேண்டும்,’’ என்றார். இதே கருத்தை 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றச் செய்யப்படும் என்றனர்.

முடிவில் கலெக்டர் கார்மேகம் பேசுகையில், ‘‘வேளாண்மை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளிடம் எடுத்துச் சென்று, உற்பத்தி திறனையும், வருமானத்தையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும். விதைகள், உரங்கள் போதிய அளவு இருப்பு உள்ளது. அதனை விவசாயிகள் வாங்கி பயன்படுத்த வேண்டும்,’’ என்றார். இக்கூட்டத்தில் வேளாண்துறை இணை இயக்குநர் கணேசன், கூட்டுறவு சங்கங்களின் இணை இயக்குநர் ரவிக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் புருசோத்தமன், தோட்டக்கலை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: