சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் முரசு கொட்டி, சங்கு ஊதி மனு அளித்து போராட்டம்

சேலம், செப். 24: சேலம் சுகவனேஸ்வரர் கோயில் நிர்வாகத்தை கண்டித்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று காலை முரசு கொட்டியும் சங்கு ஊதியும் சாமியிடம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்க தலைவர் சக்ரவர்த்தி, செயலாளர் சாமிநாதன், பொருளாளர் ரவி, செயற்குழு உறுப்பினர்கள், சிவனடியார்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் சேலம் உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல இணை ஆணையர் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்க தலைவர் சக்ரவர்த்தி கூறியதாவது: சுகவனேஸ்வரர் கோயிலில் ஒரு சில அர்ச்சகர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்தி வருகின்றனர். 63 நாயன்மார்கள் சன்னதி எப்போதும் பூட்டியே உள்ளது. அதனை திறக்க வேண்டும். கோயிலில் சில சிலைகள் மற்றும் 63 நாயன்மார்களில் 3 சிலைகள் மாற்றப்பட்டள்ளது. பக்தர்கள் புகார் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க ஏதுவாக ஆணையர் முதல் அலுவலக பணியாளர் வரையிலான அனைவரின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். கோயிலின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் வழிபடும் வகையில் அடிப்படை வசதிகள் இல்லை. கோயிலுக்கு பலகோடி ரூபாய் மதிப்பு சொத்து உள்ளது. அதுபற்றிய விவரங்கள் அடங்கிய பலகை எதுவும் இல்லை. அதிகாரிகள் திருநீர் வைப்பதில்லை. கோயில் சார்ந்த சீருடை அணிவது இல்லை. கடந்த 10 ஆண்டுகளின் செலவினங்கள் குறித்து, கோயில் இணையதளத்தில் வெளியிட வேண்டும். பாலாலயம் செய்த பின்பு சிலை அகற்றும் போது எடுத்த வீடியோ மற்றும் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யும் வீடியோக்களையும் வெளியிட வேண்டும்.

விழா காலங்களில் சிவனடியார்களை தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை. விஐபிக்கள் மட்டும் அனுதிக்கப்படுகின்றனர். கோயிலில் கழிவுநீர் வெளியேறுவதற்கு பதிலாக தெருக்களில் செல்லும் சாக்கடை கால்வாய் நீர் மழைக்காலத்தில் கோயிலுக்குள் புகுந்துவிடுகிறது. அதை தடுத்து நிறுத்தவேண்டும். இந்த கோரிக்கைகள் தீர்க்கப்படாத பட்சத்தில் நாங்கள் அடுத்த கட்டபோராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினர்.

Related Stories: