1240 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல், செப்.24: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 15,15,000 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி (90.79 சதவீதம்) 13,75,538 நபர்களுக்கும் (முதல் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 139462), இரண்டாம் தவணை தடுப்பூசி (75.06 சதவீதம்) 1137218 நபர்களுக்கும் (இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 238320) செலுத்தப்பட்டுள்ளது.

இதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 11,804 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 10112 பேருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 10,405 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 9,567 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 16,689 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 15,287 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 1,62,404 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1,34131 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.    

நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை நடந்த 37 தடுப்பூசி முகாம்களில் 11,20,363 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். அதேபோல் வரும் 25ம்தேதி - 38ம் கட்டமாக அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 1240 முகாம்கள் மூலம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி முகாம்” நடைபெற உள்ளது. முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1600 அங்கன்வாடி பணியாளர்கள், 215 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 165 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று, இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட போடாதவர்களும் முதலாம் தவணை போட்டு முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும், 18-59 வயதுக்குட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஊக்குவிப்பு தடுப்பூசியாக 2-வது தடுப்பூசி போட்டு 6 மாத இளைவெளிக்கு பின் மூன்றாம் தவணை தடுப்பூசி தவறாமல் போட்டுக்கொள்ளவேண்டும். அரசு அளிக்கின்ற இந்த தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது. பக்கவிளைவுகள் இல்லாதது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: