வீட்டின் கதவை உடைத்து 55 பவுன் நகை கொள்ளை

பள்ளிபாளையம், செப்.24: பள்ளிபாளையம் அருகே, வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 55 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள தாஜ்நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன்(67). தனியார் சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரது மகன் அமெரிக்காவில் பணிபுரிகிறார். மகள் திருமணமாகி கோவையில் வசிக்கிறார். இதனால், சந்திரசேகரன் தாஜ்நகர் வீட்டில், மனைவி பார்வதியுடன் வசித்து வருகிறார்.

மருத்துவ பரிசோதனைக்காக, சந்திரசேகரன் கடந்த 14ம் தேதி கோவைக்கு சென்றார். பரிசோதனை முடிந்து கோவையில் மகள் வீட்டில் தங்கியிருந்த இருவரும், நேற்று முன்தினம் (22ம்தேதி) தாஜ்நகர் திரும்பினர். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மர்ம நபர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் வைத்திருந்த 55 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசில் சந்திரசேகர் புகாரளித்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், சந்திரசேகர் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். கைரேகை, தடயவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: