முக்குளம் ஊராட்சியில் அசத்தல் திட்டம்; 5 ஏரிகளை தூர்வாரி அழகுபடுத்தி 2,100 மரக்கன்று நட்டு பராமரிப்பு

தர்மபுரி, செப்.24: காரிமங்கலம் அருகே, முக்குளத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் முயற்சியால், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் 5 ஏரிகளை தூர்வாரி தூய்மை செய்து மா, பலா உள்ளிட்ட 2100 மரக்கன்று நட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள முக்குளம் கிராம ஊராட்சியில் முக்குளம், சீகலஅள்ளி, மொரசப்பட்டி, மூக்கனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு மொரசப்பட்டி ஏரி, முக்குளம் ஏரி, சீகலஅள்ளி ஏரி, சோமலிங்க ஐயர் ஏரி உள்ளிட்ட 5 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்தும், கரையோரங்களில் முட்புதர்களுமாக காணப்பட்டது. இதனால் மழைக் காலங்களில் வரும் குறைந்த அளவு தண்ணீரும், தேக்கி வைக்க முடியாமல் இருந்தது.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் போதிய மழை இல்லாததால், ஏரிகளில் தண்ணீரின்றி வறண்டு கிடந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற காஞ்சனா கண்ணபெருமாள், ஊராட்சியில் உள்ள நீர்வளத்தை பெருக்க திட்டமிட்டார். இதையடுத்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் மூலம், பணியாளர்களை கொண்டு 5 ஏரிகளில் இருந்த சீமை கருவேல மரங்களை முழுவதும் அகற்றினார். மேலும், ஏரி கரையோரத்தில் இருந்த முட்புதர்களையும் அகற்றி தூய்மைப்படுத்தினார். ஏரியை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்பதற்காக, ஆந்திர மாநிலத்திற்கு சென்று 2100 மரக்கன்றுகளை வாங்கி வந்து, ஏரிக்கரைகளில் நட்டு பராமரித்து வருகிறார்.

இந்த மரக்கன்றுகள் ஒன்றின் விலை ₹600 ஆகும். இதில் மா, பலா, வாழை, நாவல், மூங்கில், காட்டு நெல்லி உள்ளிட்ட பலன் தரும் மரங்களை நட்டு வைத்துள்ளார். ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் பணி புரியும் பெண்கள், தினமும் ஏரியிலிருந்து தண்ணீரை எடுத்து வந்து மரங்களுக்கு ஊற்றுவதும், மருந்து தெளிப்பது என பராமரித்து வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்த மரங்கள் பலன் தரத் தொடங்கும் போது, அதில் கிடைக்கும் வருவாய் முழுவதையும், கிராம ஊராட்சிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பெய்த தொடர் மழையால், இந்த ஏரிகள் முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஏரிகளை சுற்றிலும் பல்வேறு மரக்கன்றுகள் இருப்பதால், பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கிறது.

இது குறித்து தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, சமீபத்தில் இந்த ஏரிகளை நேரில் பார்வையிட்டு, ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு தெரிவித்தார். இதனிடையே, மின் கட்டணத்தை குறைக்கும் விதமாக, 450க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் இருந்த அனைத்து மின்விளக்குகளையும், எல்இடி விளக்குகளாக ஊராட்சி தலைவர் மாற்றியுள்ளார். மேலும், மின்சாரம் இல்லாத போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு மின்மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்ப முடிவதில்லை. இதனால், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மொபைல் ஆப் மூலமாக, கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பி வருகின்றனர். மேலும், இந்த ஆப் மூலமே, தொட்டிகள் நிரம்பியதும், தண்ணீர் ஏற்றுவதும் நிறுத்தப்படுகிறது.

இந்த ஆப் மூலம், போதிய அளவு மின்சாரம் இருக்கிறதா? மின்மோட்டாரில் ஏதேனும் பழுது உள்ளதா? என்பதையும் அறிந்து கொள்ள முடியும். டேங்க் ஆபரேட்டர்கள் எங்கிருந்தாலும், இதனை இயக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மின்மோட்டார்கள் 6 மணி நேரம் ஓடுவதற்கு பதிலாக, 3 மணி நேரத்தில் 8 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப முடிகிறது. இதனால், மின்சிக்கனம் மட்டுமின்றி, கிராமத்தில் உள்ள மக்களுக்கு போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்ய முடிகிறது. இதனையறிந்த கலெக்டர் சாந்தி, மாவட்டம் முழுவதும் உள்ள 251 ஊராட்சிகளிலும், இந்த மொபைல் ஆப் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

Related Stories: