அரசு அலுவலர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

தர்மபுரி, செப்.24: தர்மபுரியில், வருமான வரித்துறை சார்பில் அரசு அலுவலர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், வருமான வரித்துறை சார்பில் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், கோவை வருமான வரித்துறை துணை ஆணையர் பாரதி பேசுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், தங்கள் துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வருமான வரி வரம்பிற்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வருடத்திற்கும் தவறாமல் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட அறிக்கை, சரியான நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வரி பிடித்ததில் குறைகள் ஏதேனும் இருந்தாலோ அல்லது சந்தேகங்கள் இருந்தாலோ, இதுகுறித்து வருமான வரி பிடித்தம் செய்யும் அதிகாரியிடம் உடனடியாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்,’ என்றார். பின்னர், வருமான வரி பிடித்தம் தொடர்பாக கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு, வருமான வரி அலுவலர்கள் விரிவான விளக்கங்களை அளித்தனர். அரசு ஒப்பந்த பணிகள் மற்றும் அரசு பிற பணிகளில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள், பிற பணிகள் செய்து வருபவர்களுக்கும், வருமான வரி பிடித்தம் செய்து அதன் விவரங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் தவறாமல் தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை அலுவலர்கள் விளக்கினர்.

இக்கூட்டத்தில் அரூர் ஆர்டிஓ விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சுமதி, மாவட்ட கருவூல அலுவலர் சுப்பிரமணியன், ஓசூர் வருமான வரித்துறை அலுவலர் க்ஷிதீஜ் ரஞ்சன், ஓசூர் வருமான வரி ஆய்வாளர் துர்கா பிரசாத் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை தலைவர்கள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: