×

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு அறுவடை இயந்திரங்கள் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் உறுதி

சிவகங்கை, செப்.24: சிவகங்கை மாவட்டத்தில் அறுவடை காலத்திற்கு தேவையான அறுவடை இயந்திரங்கள் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. பல்வேறு துறை அலுவலர்கள், விவசாயிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அரசு மற்றும் தனியார் இடங்களில் உள்ள யூகலிப்டஸ், சீமைக்கருவேல மரங்கள் மற்றும் அந்நிய மரங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தனியார் யூகலிப்டஸ் மரங்களை நட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கின்றனர். அதை தடுக்கும் போது தேவையற்ற பிரச்சினைகள் உருவாகிறது. எனவே அரசு சார்பில் இந்த மரங்களை அகற்றுவது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். விவசாயிகளிடம் தேங்காய் கொப்பரைகளை கூடுதலாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலாயூர் கண்மாய் பாசன மடை நான்கிற்கான கால்வாய்களை தூர்வார வேண்டும். வைகையில் பூர்வீக பாசன விவசாயிகள் பயனடையும் வகையில் கடலுக்கு சென்று வீணாகும் உபரி நீரை சிவகங்கை மாவட்டம் பயனடையும் வகையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களும் கிடைக்கும் வகையில் இருப்பு வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். பதிலளித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசுகையில், அறுவடை இயந்திரங்கள் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். யூரியா 600 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இல்லை என குற்றச்சாட்டு உள்ளது. அங்கும் இருப்பு வைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

Tags : Sivaganga ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...