உணவு விடுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆய்வு: 35 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல், ரூ. 10 ஆயிரம் அபராதம்

திருவள்ளூர், செப்.24: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் சா.கண்ணன் மேற்பார்வையில், திருமழிசை பேரூராட்சியின் எல்லைக்குட்பட்ட மடவிளாகம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்கீதா உணவு விடுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் தா.மாலா தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்த்தல் மற்றும் ஒழிப்பு பணி குறித்து திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை கண்டுபிடித்து 35 கிலோ அளவில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த சங்கீதா உணவு விடுதிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின் போது இளநிலை உதவியாளர் ஜோசப், பணி ஆய்வாளர் மதியழகன், உதவி பொறியாளர் சுபாஷினி, பொது சுகாதார மேற்பார்வையாளர் பாண்டியன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: