×

இலவச வீட்டு மனை பட்டா கோரி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை

பள்ளிப்பட்டு,செப்.24: இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மின் இணைப்புக்கு தடையில்லா சான்று வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிபேட்டை காந்தி நகரில் அனாதீனம்  புறபோக்கு நிலத்தில் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அங்கு குடியிருப்பவருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றும் மேலும் மின் இணைப்பு வழங்க தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிப்பட்டு அமமுக ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக திருத்தணி நகர அமமுக  செயலாளர் எம். கருணா பங்கேற்று இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காத வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும் நகரி திண்டிவனம் ரயில் பாதை திட்டம் வீடுகள் உள்ள பகுதியில் செல்லவில்லை என்று   தனி தாசில்தார் கடிதம் வழங்கியும் அதன் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து தாசில்தார் தமயந்தி உதவி ஆய்வாளர் நாகபூஷணம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தை முடிவில் உடனடியாக நகரி திண்டிவனம் ரயில் பாதை திட்ட தனி வட்டாட்சியரிடம் அறிக்கை பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி ஏற்று போராட்டத்தை கைவிட்டனர். இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகிரிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Tahsildar ,
× RELATED சிவகங்கை அருகே டூவீலரில் கொண்டு சென்ற பணம் பறிமுதல்