கோபி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

கோபி,செப்.24:ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலமாக 24,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது அறுவடை பணிகள் தொடங்கியதை தொடர்ந்து காசிபாளையம், புதுக்கரைபுதூர், மேவாணி, நஞ்சை புளியம்பட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 8 நாட்களுக்கு முன்னர் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டு, விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் நஞ்சை புளியம்பட்டி பகுதியில் 2 இடங்களில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இதில் செல்லப்பன் டீக்கடை பகுதியில் திறக்கப்பட்ட கொள்முதல் மைய எண் 1ல் கடந்த 8 நாட்களாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில், ந.புளியம்பட்டியில் உள்ள கொள்முதல் மைய எண் 2 ல், கடந்த 8 நாட்களில் 170 மூட்டை நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதத்தை விட கூடுதலாக உள்ளதாக கூறிய கொள்முதல் மைய அலுவலர் பூபதி விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் செய்ய மறுத்துள்ளார்.  

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள்  கோபி- பங்களாபுதூர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். பங்களாபுதூர் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நெல்லில் ஈரப்பதம் அளவிடும் கருவி பழுதடைந்த நிலையில் இருப்பதும், அதன் காலாவதி தேதி முடிவடைந்து நான்கு மாதங்கள் ஆகியிருப்பதும் தெரிய வந்தது.  இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கொள்முதல் மைய அலுவலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:  செல்லப்பன் டீ கடை பகுதியில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் மையத்தில் தினமும் ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால் இந்த மையத்தில் 170 மூட்டை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரமாக ஒரே இடத்தில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளதால் நெல் முளைத்து விடும் நிலையில் உள்ளது.

கொள்முதல் மையம் மிகவும் சிறிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் இன்னும் அறுவடை செய்யாமல் காத்திருக்கின்றனர். இதனால் பயிர்கள் மண்ணில் சாய்ந்து வீணாகிறது. ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, இடுபொருட்கள், உர விலை கனிசமாக உயர்ந்து உற்பத்தி செலவு ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நெல் அறுவடைக்கு இயந்திரமும் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையத்தில் கடந்த 8 நாட்களாக கொள்முதல் செய்யாத நிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நெல் சேதமடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து காவல்துறையினர்  பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். நாளை (இன்று) கொள்முதல் செய்ய மறுத்தால் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: