பள்ளி மாணவர்களுக்கு பருவத்தேர்வு நடத்துவதில் சிக்கல்

கோவை, செப்.24: கோவையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் வரும் 26-ம் தேதி துவங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாணவர்களுக்கு காலை, மதியம் என இரண்டு பிரிவுகளில் தேர்வு நடத்த அட்டவணை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள் பள்ளிக்கு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது வட்டார கல்வி அலுவலகத்தில் காலை வந்து ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று வினாத்தாளை எடுத்து வந்து தேர்வு நடத்துவதில் சிக்கல் இருப்பதாகவும், தினம் தினமும் ஒரு தகவலை அதிகாரிகள் அளிப்பதால், தேர்வு நடத்துவது குறித்து குழப்பம் இருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ”வினாத்தாளை காலையில் தினமும் அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொண்டு 20 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பள்ளிக்கு சென்று தேர்வு நடத்துவது என்பது சாத்தியம் இல்லை. முதலில் வினாத்தாள் பள்ளிக்கு அனுப்பப்படும் என தெரிவித்தனர். தற்போது, இப்படி கூறுகின்றனர். மேலும், தேர்வு தொடர்பாக எவ்விதமான முறையான தகவலை அளிக்கவில்லை. இதனால், வரும் 26-ம் தேதி தேர்வு நடக்குமா? என்ற குழப்பத்தில் உள்ளோம்” என்றனர். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறுகையில்,”ஆசிரியர்கள் குழப்பம் அடைய தேவையில்லை. வினாத்தாள் பள்ளிக்கு கொண்டு வந்து அளிக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories: