வாக்குச்சாவடி மறுசீரமைப்பு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

ஈரோடு,செப்.24: ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு  செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை மற்றும் பவானிசாகர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் எவ்வித திருத்தமும் இல்லை. மீதமுள்ள 4 தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி ஆரம்பப்பள்ளி பி.மாரியம்மன் கோயில் வீதியில் இருந்து வந்த பழைய கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் கருங்கல்பாளையத்தில் உள்ள டிவைன் ஆரம்பப்பள்ளியின் முதல் அறைக்கும், கருங்கல்பாளையம் விநாயகர் கோயில் வீதி ஈரோடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் சிமெண்ட் சீட்டை எடுத்து தார்சு கட்டிடமாக கட்டிடத்தின் வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு மரப்பாலம் ரோடு பி.மாரியம்மன் கோயில் வீதி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியின் மேற்கு பார்த்த சிமெண்ட் சீட்டால் வேயப்பட்ட கட்டிடத்தில் உள்ள வாக்குச்சாவடி மையமானது, அதே கட்டிடத்தின் சிமெண்ட் சீட்டை எடுத்து தார்சு கட்டிடமாக மாற்றப்பட்டதால் இந்த வாக்குச்சாவடி மையத்திற்கு கட்டிடத்தின் வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காடப்பநல்லுர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் தார்சு கட்டிடத்தின் வடக்கு பார்த்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்த வாக்குச்சாவடி மையமானது கட்டிடம் பழுதடைந்ததால் தற்போது காடப்பநல்லுர் ஊராட்சி கிராம சேவை மைய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பவானி வட்டம் குறிச்சி உள்வட்டம் மாணிக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கட்டிடத்தின் செயல்பட்டு வந்த வாக்குச்சாவடி மையமானது கட்டிடம் பழுதடைந்ததால் மாணிக்கம்பாளையம் ஊராட்சி கிராம சேவை மைய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணிக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வந்த வாக்குச்சாவடி மையமானது கட்டிடம் பழுதடைந்ததால் தற்போது மாணிக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கவுந்தப்பாடி பொம்மன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையமானது கவுந்தப்பாடி ஆர்.வி மற்றும் காந்தி வீதி பொம்மன்பட்டி வார்டு எண்.1 ல் 117 வாக்காளர்கள் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ளதால் அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு மாற்றம் செய்யயப்பட்டுள்ளது. அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் குப்பாண்டாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்த வாக்குச்சாவடி மையம் பழுதடைந்ததால் குப்பாண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தார்சு கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கோபி சட்டமன்ற தொகுதியில் அளுக்குளி செயிண்ட் தெரசா அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளியில் அமைந்திருந்த வாக்குச்சாவடி மையத்தில் உள்ள அறையானது ஸ்மார்ட் கிளாஸ் ஆக மாற்றியதால் இப்பள்ளியின் முதல் அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோபி அளுக்குளி செயிண்ட் தெரசா அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் தெற்கு பார்த்த தார்சு கட்டிடத்தில் மேற்கு பகுதி அறையில் அமைந்திருந்த வாக்குச்சாவடி மையத்தின் அறையானது கணினி அறையாக மாற்றியதால் இப்பள்ளியில் புதிய தார்சு கட்டிடத்தின் 2ம் அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோபி கரட்டடிபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஓட்டு கட்டிடத்தில் அமைந்திருந்த வாக்குச்சாவடி மையத்தின் அறையானது பழுதடைந்த காரணத்தால் இப்பள்ளியில் புதிய தார்சு கட்டிடத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கபிலர் வீதி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்திருந்த வாக்குச்சாவடி மையத்தின் அறையானது வட்டார கல்வி அலுவலர் அலுவலகமாக மாற்றம் செய்யப்பட்ட காரணத்தால் இப்பள்ளியில் தார்சு கட்டிடத்தின் அறைக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கோபி நகராட்சி நடுநிலைப்பள்ளி ஓட்டு கட்டிடத்தில் மேற்கு பார்த்த புதிய தார்சு கட்டிடத்தின் அறையில் அமைந்திருந்த வாக்குச்சாவடி மையத்தின் இந்த அறையானது பழுதடைந்த காரணத்தால் இப்பள்ளியின் கட்டிடத்தில் கிழக்கு பகுதி அறைக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பாரியூர் வெள்ளாளபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தார்சு கட்டிடத்தில் அமைந்திருந்த வாக்குச்சாவடி மையத்தின் அறையானது பழுதடைந்த காரணத்தால் இப்பள்ளியில் வடக்கு பார்த்த தார்சு கட்டிடத்தில் மேற்கு பகுதி அறைக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: