அரசு பள்ளிகளில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்

ஈரோடு, செப். 24:அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் பரவி வரும் இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவைகளால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்திலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று முதல் அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் மருத்துவத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகின்றது. ஈரோடு எஸ்.கே.சி ரோடு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஈரோடு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பாக சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என்பது குறித்து டாக்டர்கள் பரிசோதித்தனர். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. முகாமில் பள்ளி தலைமையாசிரியை சுமதி, தேசிய குழந்தைகள் நலத்திட்ட டாக்டர் சசிரேகா, அசோக்குமார், செவிலியர் சுகுணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: