×

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே பேச்சுப் போட்டிகள்: திருச்சி கலெக்டர் தகவல்

திருச்சி, செப்.24: திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: திருச்சி மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி அக்டோபர் 12ம் தேதி திருச்சி மாவட்ட மைய நூலகக் கூட்ட அரங்கில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. பள்ளிகளுக்கான போட்டி காலை 9.30 மணிக்குத் தொடங்கப்படும், கல்லூரிகளுக்கான போட்டி மதியம் 1.30 மணிக்குத் தொடங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஒரு கல்லூரிக்கு ஒருவர் என கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற வேண்டும். பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் பள்ளிக்கு ஒருவர் என அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று போட்டியில் கலந்துகொள்ள வேண்டும். போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, 2ம் பரிசு ரூ.3,000, 3ம் பரிசு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது.

இவை அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகையாக ரூ.2,000 வீதம் வழங்கப்பட உள்ளது. அதுபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, 2ம் பரிசு ரூ.3,000, 3ம் பரிசு ரூ.2,000 என்ற வகையில் வழங்கப்பட உள்ளது. பேச்சு போட்டிக்கான தலைப்புகள் பள்ளிகளுக்கு, அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுகையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயர் செல்லுவோம் என 4 தலைப்புகளும் மற்றும் கல்லூரிகளுக்கு, வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தி அடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை என 6 தலைப்புகளிலும் பேசலாம் என்று மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கூறியுள்ளார்.

Tags : Gandhi ,Trichy ,
× RELATED காந்தி கிராம பல்கலைக்கழக பதிவாளர்...