அக்டோபர் 2ல் நடைபெறும் கிராம சபா கூட்ட செலவின வரம்பு ₹5 ஆயிரமாக உயர்வு தமிழக அரசு அவசர உத்தரவு

வேலூர், செப்.24: அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபா கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, அதற்கான செலவின வரம்பை ₹5 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டங்கள் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, மார்ச் 22 உலக நீர் நாள் மற்றும் நவம்பர் 1 உள்ளாட்சி தினம் என 6 நாட்கள் நடத்தப்படுகிறது. இந்த கூட்டங்களில் கிராமத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கட்டமைப்பு பணிகள், ஊராட்சி நிர்வாகம், கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் என அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதங்கள் நடத்தப்படுகிறது.

இக்கிராம சபா கூட்டங்களுக்கு இதுவரை ₹1,000 செலவினமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் அக்டோபர் 2ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபா கூட்டங்களுக்கான செலவின வரம்பை ₹5 ஆயிரமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த செலவினத்தில் பொதுமக்கள் பொதுவெளியில் அமருவதற்கேற்ப ஷாமியானா பந்தல் அமைப்பது, மைக் செட் அமைப்பது, துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பது போன்றவை மேற்கொள்ளப்படும்.

மேலும் இக்கிராம சபா கூட்டம் நடைபெறும் இடத்தையும், நேரத்தையும் முன்கூட்டியே கிரம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். எந்தவொரு மதம் சார்ந்த இடங்களிலும் இந்த கூட்டத்தை நடத்தக்கூடாது. அத்துடன் கூட்டம் முடிந்தவுடன், அதுதொடர்பான விவர அறிக்கையை அக்டோபர் 12ம் தேதிக்குள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனரகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இக்கிராம சபா கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். மேலும் 30.09.2022ல் முடியவுள்ள காலத்தில் கிராம ஊராட்சி பொதுநிதியில் மேற்கொண்ட செலவின அறிக்கை படிவம் 30 மற்றும் இதரவிவரங்களை கிராம சபாவில் படித்து மக்களின் ஒப்புதலை பெற வேண்டும்.

கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையை பார்வைக்கு வைத்து மக்களின் ஒப்புதலை பெற வேண்டும். ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொது கட்டிடங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் ஏற்படுத்த வேண்டும். அதேபோல் ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சரியாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். இதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் என 13 பொருள்கள் குறித்து கிராம சபா கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Related Stories: