தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

கரூர், செப். 24: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் புரட்டாசி பெருந்திருவிழாவின் முதல் சனிக்கிழமை நாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் புரட்டாசி பெருந்திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயிலில் திருத்தேரோட்டம் நடைபெறவில்லை. இந்தாண்டு திருத்தேரோட்டம் உட்பட அனைத்து நாட்கள் மற்றும் சனிக்கிழமை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வரவுள்ளனர். இந்நிலையில், புரட்டாசி பெருந்திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி செப்டம்பர் 27ம்தேதி நடைபெறுகிறது.

திருக்கல்யாணம் அக்டோபர் 3ம் தேதியும், திருத்தேரோட்டம் 5ம் தேதியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகள் மட்டுமின்றி, செப்டம்பர் 24, அக்டோபர் 1, அக்டோபர் 8 மற்றும் 15ம் தேதி என நான்கு சனிக்கிழமை நாட்களிலும் அதிகாலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் வந்து செல்ல தேவையான வசதி உட்பட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகமும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறையும் மேற்கொண்டு வருகிறது. மேலும், அக்டோபர் 24ம் தேதி (இன்று)முதல் சனிக்கிழமை என்பதால் அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Stories: