ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி குடிமை பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம்

புதுச்சேரி, செப். 24:  புதுவையில் ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க கோரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை திமுகவினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் 2 திமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்தனர்.  புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகள் மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து ெபாதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றி ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் செப்.23ம் தேதி தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை திமுக சார்பில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் அருகே  ஆர்ப்பாட்டம் நடந்தது.

எதிர்க்கட்சி தலைவரும், திமுக அமைப்பாளருமான சிவா தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் திமுக எம்ல்ஏக்கள் சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், சண்.குமரவேல், செந்தில்குமார், குணா

திலீபன், பெல்லாரி கலியபெருமாள், அமுதாகுமார், சுந்தரி அல்லிமுத்து, பொருளாளர் லோகையன், சிறப்பு அழைப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரேஷன் கடைகளை மூடாதே, மக்களை வஞ்சிக்காதே, ரேஷன் கடைகளை திறந்து வெள்ளை அரிசி வழங்கிடு, ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்கிடு உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

 இதையடுத்து, அங்கு எஸ்பி பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், செந்தில்குமார், ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, திமுகவினர் குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் பேரிகார்டு மூலம் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்எல்ஏக்கள் சம்பத், செந்தில்குமார் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: