பண்ருட்டி அருகே பரபரப்பு பள்ளி மாணவியை 28 நாள் வீட்டில் அடைத்து பாலியல் பலாத்காரம்

பண்ருட்டி, செப். 24:  பண்ருட்டி அருகே பள்ளி மாணவியை 28 நாள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த பூக்கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 22ம் தேதி பள்ளிக்கு சென்று வருகிறேன் என கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடலூர் அருகே வெள்ளக்கரை பஸ் நிலையத்தில் அழுது கொண்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி அங்கு சென்று சிறுமியை அழைத்து வந்து, என்ன நடந்தது என தாய் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒதியடிக்குப்பம் பகுதியை சேர்ந்த பூக்கடையில் வேலை செய்து வரும் தனுஷ் (21) என்பவர் தன்னிடம் ஆசைவார்த்தை கூறி பழகி வந்தார். சம்பவத்தன்று என்னை ஆசைவார்த்தை கூறி பைக்கில் அழைத்து சென்ற தனுஷ் வீட்டில் அடைத்து வைத்து பல நாள் பலாத்காரம் செய்தார். மேலும் இதை யாரிடமும் கூறக்கூடாது. வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. மீறினால் உன்னையும், உன் குடும்பத்தையும் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு சம்பவத்தன்று வெள்ளக்கரை பஸ் நிலையத்தில் என்னை விட்டு விட்டு சென்றுவிட்டார் என கூறினார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த தனுஷ் என்பவரை கைது செய்ய வேண்டும் என கூறி இருந்தார். இதன்பேரில் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தல் போன்ற பிரிவின் கீழ் தனுஷ் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து வைத்து 28 நாள் பூக்கடைக்காரர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: