×

கடலூர் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

கடலூர், செப். 24:  தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடலூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. பணியாளர்களை ஆண்டுக்கு ஒருமுறை பொதுமாறுதல் மூலமாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அதிகமாக விற்பனை நடைபெறும் கடையில் அதிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான விதி கடைபிடிக்கப்படாமல், குறைவாக விற்பனையாகும் கடைக்கு அதிக விற்பனையாளர்களும், அதிகமாக விற்பனையாகும் கடைக்கு குறைந்த விற்பனையாளர்களையும் நியமிக்கும் போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதேப்போன்று, தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பாகுபாடு காட்டப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் நெய்வேலிப் பகுதியைச் சேர்ந்த 16 டாஸ்மாக் பணியாளர்கள் குற்றச்செயலுக்காக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் முறைகேடு நடந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அப்போதைய டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய மேலாளர் நியமனம் செய்யப்பட்டும், 16 பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. சங்கத்தின் மாநில தலைவர் கு.சரவணன் மீதான பணியிடை நீக்க விசாரணை முடிந்தும் அவருக்கு சுமார் ஓராண்டாக பணி வழங்காமல் உள்ளனர். இவ்வாறு, பல்வேறு வகைகளில் கடலூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. இந்த போக்கினை கண்டித்து வரும் அக்டோபர் 11ஆம் தேதி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார். அப்போது சங்கத்தின் மாவட்டத் தலைவர் அல்லிமுத்து, செயலாளர் பாலமுருகன், துணை செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Cuddalore ,Tasmac ,
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்