சினிமா தயாரிப்பாளரிடம் படம் ரிலீஸ் செய்வதாக கூறி ரூ3 லட்சம் பெற்று மோசடி: இடைத்தரகர் கைது

திருவொற்றியூர்: மணலி கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் பியாரிலால் குந்தச்சா (57). சினிமா தயாரிப்பாளராகவும், விநியோகிஸ்தராகவும் இருந்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு இவரை, சைதாப்பேட்டை, சுப்பிரமணி தெருவை சேர்ந்த சினிமா இடைத்தரகர் குமார் (எ) ராஜேந்திரகுமார் (58), வடபழனியை சேர்ந்த சினிமா பட விநியோகஸ்தர் குமார் (எ) பால்குமார் (56). ஆகிய இருவரும் கடந்த 13.7.2022 அன்று சந்தித்தனர். அப்போது, புதிதாக தயாரிக்கப்பட்ட லடுக்கி என்ற இந்தியில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட படம் சென்னையில் பிரபலமான தியேட்டர்களில் (1.7.2020) அன்று ரிலீஸ் செய்வதற்காக ₹3 லட்சம் கடன் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அப்போது, படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் பெயர்கள் மற்றும் விவரங்களையும் பியாரிலால் குந்தச்சாவிடம் கொடுத்துள்ளனர். படம் ரிலீஸ் ஆனவுடன் வாங்கிய கடனை திருப்பித் தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ₹3 லட்சத்தை மீடியேட்டர் ராஜேந்திரகுமார், விநியோகஸ்தர் பால் குமார் ஆகியரிடம் கொடுக்க, அதற்கான ஒப்பந்தம் எழுதிக் கொடுத்தனர். இந்நிலையில், கடன் வாங்கிய இருவரும் கூறியதுபோல் தியேட்டர்களில் படம் வெளியாகவில்லை. இதனால், சந்தேகமடைந்த பியாரிலால்குந்தச்சா, ராஜேந்திரகுமார் மற்றும் பால்குமார் ஆகிய 2 பேரிடமும், தனது பணத்தை திரும்ப திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இருவரும் நாங்கள் பணத்தை தந்து விடுகிறோம் என்று உறுதி அளித்துள்ளனர்.

ஆனால், பல நாட்கள் ஆகியும் அவர்கள் இருவரும் பணம் தரவில்லை. மேலும் பணம் கொடுக்க முடியாது என்று மறுத்ததோடு பியாரிலால் குந்தச்சாவை அவர்கள் மிரட்டியுள்ளனர். பியாரிலால் குந்தச்சா இதுகுறித்து மணலி காவல் நிலையத்தில் கடந்த 1ம் தேதி புகார் அளித்தார். புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்ததாக மூன்று பிரிவின் கீழ் ராஜேந்திரகுமார் மற்றும் பால்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இடைத்தரகர் ராஜேந்திரகுமாரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.  தலைமறைவாக உள்ள பால்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: