சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்ட 2 பெண்களுக்கு தலா ரூ5 லட்சம் இழப்பீடு

சென்னை:  நாகை மாவட்டம் வெள்ளிப்பாளையத்தில் கள்ளச்சாராயம் விற்றதாக கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி மற்றும் சத்யா ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.  இதையடுத்து, முத்துலட்சுமியின் கணவர் மனோகரனும், சத்யாவின் மகள் திவ்யாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். அதில், கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்கு பிறகே குண்டர் சட்டத்தில் இருவரும் அடைக்கப்பட்டனர். எனவே, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த இரு மனுக்களும், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை தமிழ்நாடு அறிவுரை கழகம் ஏற்க மறுத்து விட்டது. அதனடிப்படையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசும் மறுநாளே அதற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால், அதுதொடர்பான ஆவணங்களை உரிய காலத்தில் பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, இதுதொடர்பான அதிகாரிகள் இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டு, இருவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்ட மறுநாள் தான் குண்டர் சட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை அறிவுரை கழகம் ஏற்க மறுத்தால் உடனடியாக அதை திரும்பப்பெற வேண்டும். எனவே 128 நாட்கள் சட்டவிரோத காவலில்  அடைக்கப்பட்ட மகாலட்சுமி மற்றும் சத்யா ஆகியோருக்கு தலா ரூ5 லட்சத்தை இழப்பீடாக 6 வாரங்களில் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: