ரவுடிகளை சுற்றிவளைத்தபோது போலீஸ்காரருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது

வேளச்சேரி: பள்ளிக்கரணை, ராஜிவ்காந்தி தெருவில் சிலர் கஞ்சா போதையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிவதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில், குற்றப்பிரிவு காவலர் சுவாமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சந்தேகத்திற்கிடமாக திரிந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். அப்போது,  அதில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால்  சுவாமிநாதனை குத்தினார். இதில், அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.  சக காவலர்கள் அவரை மீட்டு, பள்ளிகரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிடிபட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில், ராணிப்பேட்டை, பஜனை கோயில் தெருவை சேர்ந்த  ரிஸ்வான் (எ) கார்த்திகேயன் (22), அவரது நண்பர் பள்ளிக்கரணை, கிணற்றுசாலை தெருவை சேர்ந்த அரவிந்த் (25) என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய இவர்களது கூட்டாளியான மணிகண்டன் உள்பட சிலரை தேடி வருகின்றனர். மணிகண்டன் மீது  பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை வழக்கும், ரிஸ்வான் மீது காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: