திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான 1000 கிலோ கஞ்சா பறிமுதல்:கைது செய்பவர்களின் வங்கி கணக்குகள் ஆய்வு,குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருவள்ளூர், செப்.23: தமிழகத்தில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழக முதல்வர் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி காவல் துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களுடன் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன. மேலும் மாவட்டத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளான எளாவூர், ஊத்துக்கோட்டை, பொன்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் கூடுதலாக காவலர்கள் சோதனைப் பணிக்கு அமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் குறித்த ரகசிய தகவல் சேகரிக்க உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தை கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சிபாஸ் கல்யாண் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சோதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். அதன்படி நேற்று திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி தலைவர் எஸ்.கே‌.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் எஸ்பி பா.சிபாஸ் கல்யாண் முன்னிலை வகித்தார். கல்லூரி செயலாளர் ஸ்ரீகாந்த், தாளாளர் ஏ.ஆர்.பிரபாகரன், கல்லூரி முதல்வர் பழனி ஆகியோர் வரவேற்றனர்.

இதில் காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள் உபயோகிப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து  போதைப் பொருளை விற்பனை செய்பவர்கள் குறித்து தொலைபேசி மற்றும் செல்போன் மூலமாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய எண்ணையும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி சத்யப்பிரியா, போதைப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போதைப் பொருட்களை விற்பனை செய்தால் கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் குறித்து  மாணவ மாணவிகளிடையே எடுத்துச் சொன்னதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் கஞ்சா வேட்டை-1 கஞ்சா வேட்டை 2 ஆகிய திட்டம் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரம் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்திருப்பதாகவும், இது சம்பந்தமாக 300 வழக்குகள் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.  

மேலும் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்பவர்களின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், யார் யாருடன் வங்கி பண பரிவர்த்தனை செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  மேலும், கஞ்சா கடத்தல் வழக்கில் சிறு சிறு வழக்குகள் போடப்படுவதால் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுவதால் கடுமையான தண்டனை விதிக்கப்படுமா என கேட்டதற்கு குண்டர் தடுப்பு உள்ளிட்ட கடுமையான தண்டனை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், தேர்வாணையம் மூலம் விரைவில் காவலர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடலில் ஈடுபட்ட காஞ்சி சரக டிஐஜி யிடம் பேசிய மாணவர் ஒருவர், நண்பர்கள் வற்புறுத்தலால் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி வந்ததாகவும், 4 ஆண்டுகளாக குடி போதைக்கு அடிமையாக இருந்ததால் தான், கடந்த கொரோனா தொற்றால் தந்தை உயிரிழந்துவிட்டார்.

உடன் பிறந்தவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக தானாக இந்த குடியை மறந்து தற்போது நிம்மதியாக இருப்பதாகவும், மதுவை மறந்ததால் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.  இதனால் அந்த மாணவருக்கு டிஐஜி சத்யப்பிரியா வாழ்த்துக்களை தெரிவித்தார். அதே போல் ஒரு மாணவி பேசும் போது, மற்ற நாடுகளில் இந்த போதைப் பொருளுக்கு அங்கீகாரம் இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் இதற்கு அங்கீகாரம் இல்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்திற்காக போதைப் பொருட்களுக்கு தடை விதித்திருப்பதாக தெரிவித்தார். பிறகு போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியையும் காஞ்சி சரக டிஐஜி சொல்ல அதனை மாணவ, மாணவிகள் ஏற்றனர்.

Related Stories: