பொதுமக்களிடம் தீபாவளி பண்ட் பிடித்து கோடிக்கணக்கில் மோசடி செய்த ஏஜென்சி உரிமையாளர் ஓட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பியிடம் புகார்

திருவள்ளூர், செப்.23: திருவள்ளூர் அருகே பொதுமக்களிடம் தீபாவளி பண்டு பிடித்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்து தப்பிய ஏஜென்சி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜே.பி. ஜோதி. இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் ஏஜென்சி நடத்திவருகிறார். மேலும் தீபாவளி பண்டு நடத்திவந்தார். மாதம் ரூ.1000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வழங்குவதாகவும் மாதம் 500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட்களும் வழங்கப்படும் என்று அறிவித்து பணம் வசூலித்து வந்துள்ளார்.

அவரிடம் தாமரைபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளியூர், வெங்கல், செம்பேடு, சேத்துப்பாக்கம், பூவளம்பேடு மற்றும் குறுவாயில் உட்பட பல கிராமங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டு சீட்டு கட்டிவந்துள்ளனர். மேலும் ஒவ்வொரு கிராமங்களிலும் ஏஜென்ட்டுகள் நியமித்து ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் தாமரைபாக்கம், திருவள்ளூர், மணவாளநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஜே.பி. ஸ்டார் ஏஜென்சி புதிய கடைகளை திறந்த ஆடம்பர செலவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தமாதம் தீபாவளி வருவதால் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் இருந்துள்ளார். இதுபற்றி பணம் கட்டியவர்கள் சென்று கேட்டபோது சில நாட்களில் பொருட்கள் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜே.பி.ஸ்டார் ஏஜென்சி கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு உரிமையாளர் ஜோதி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் பாதிக்கப்பட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள ஜே.பி. ஸ்டார் ஏஜென்சி கடை முன் குவிந்ததால் பரபரப்பை ஏற்பட்டது. ஜே.பி. ஜோதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதன்படி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ஜே.பி.ஜோதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: