செய்யூர் அருகே மீனவர்களுக்கான மானிய விலை டீசலில் முறைகேடு: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

செய்யூர், செப் 23: செய்யூர் அருகே மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசலை தனிப்பட்ட நபர்களுக்கு வழங்கி அரசு அதிகாரிகள் பல லட்சம் ரூபாய் வரையில் லாபம் பார்ப்பதாக அதிகாரிகள் மீது மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது. தமிழக அரசு மீனவர்கள் நலன் கருதி டீசலினால் இயக்கப்படும் பைபர் மற்றும் நாட்டு படகுகள் பயன்படுத்தும் மீனவர்களுக்கு தமிழக மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மானிய விலையில் டீசல் வழங்க முடிவு செய்து கடந்த 10 வருடங்களுக்கு முன் திமுக ஆட்சியில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. மீனவர்கள் மானிய விலையில் டீசலை பெரும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் ஆங்காங்கே இதற்கென டீசல் பங்குகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில், செய்யூர் அடுத்த கிழக்குக் கடற்கரை சாலை கோட்டைக்காடு பகுதியில் டீசல் பங்க் கடந்த 2011ம் ஆண்டு அமைக்கப்பட்டது. கொட்டிவாக்கம் குப்பம் முதல் ஆலம்பரை குப்பம் வரையில் உள்ள 42 மீனவ கிராம மக்களில் சுமார் 2 ஆயிரம் பைபர் மற்றும் நாட்டு படகுகள் வைத்துள்ள மீனவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் மானிய விலை டீசல் வழங்கப்பட்டது. காலை 10 மணி முதல் 5 மணி வரையில் ஏங்கும் இந்த மானிய விலை டீசல் பங்கில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும்  தினமும் 100 லிட்டர் டீசல் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தில் உள்ள பயனாளிகள் குறிப்பிட்ட படகுகள் வைத்திருப்பது மட்டுமின்றி அவர்கள் அனைவரும் உயிர் காப்பீடு செய்திருக்க வேண்டும். மேலும், அவர்கள் அனைவரும் வாக்கி டாக்கி வைத்திருக்க வேண்டும். இவைகள் அனைத்தும் வைத்திருக்கும் மீனவர்களுக்கு மட்டுமே பயனாளிகள் அட்டை வழங்கப்படும். ஆரம்பத்தில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவரும் இதனை பின்பற்றி வந்தனர்.

ஆனால், நாளடைவில் மீனவர்கள் இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படவில்லை. மேலும், இத்திட்டத்தில் இருந்த பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடி தொழிலையே செய்யாமல் போயினர். இதனை சாதகமான பயன்படுத்திக்கொண்ட பயனாளிகள் சிலர் 300 முதல் 400 பயனாளிகள் பெற வேண்டிய பல்லாயிரக்கணக்கான லிட்டர் டீசலை ஒரே நபர் பேரல்களில் பிடித்து வெளியிடங்கள் கொண்டு சென்று கள்ள சந்தையில் விற்று வருகின்றனர். இதற்காக, பங்க் ஊழியர்கள் முதல் மாவட்ட அதிகாரிகளுக்கு வரை வாரம் தோறும் ஒரு பெரிய தொகை செல்வதாக  கூறப்படுகிறது. இத்திட்டம் துவக்கப்பட்டு சில மாதங்களிலேயே அதிகாரிகள் உடந்தையால் இப்பணி நடந்து வருவதும் அதுவும் பட்டப்பகலில் பங்கில் இருந்து பேரல்கள் மூலம் டீசல் கொண்டு செல்வதை கண்டு மற்ற மீனவர்கள் மற்றும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இத்திட்டத்தில், பெரும்பாலான பயனாளிகள் பயன்பெறவில்லை என்றாலும் கூட பயனாளிகளின் அட்டைகளை பயன்படுத்தி டீசலை கள்ள சந்தையில் விற்றபது சட்டவிரோதமாகும். எனவே, தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்தி ஏற்கனவே இத்திட்டத்தில் உள்ள பயனாளிகளில் தகுதியுள்ள பயனாளிகளை மீண்டும் தேர்வு செய்து கள்ள சந்தையில் டீசல் விற்பனை நடப்பதை தடுப்பதோடு இதுநாள் வரையில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்த அரசு அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் மீது சட்டரீதியான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: