சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை போக்சோ சிறப்பு கோர்ட் பரபரப்பு தீர்ப்பு ஆரணி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

திருவண்ணாமலை, செப்.23: ஆரணி அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்ெகாடுமை செய்த அவரது சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(27). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவர், அதே கிராமத்தில் டியூஷன் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 8.11.2018 அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். உறவினர் முறையில் இவர் அந்த சிறுமிக்கு சித்தப்பா என்பதால், எந்த தயக்கமும் இல்லாமல் சிறுமி அவரது வீட்டுக்கு சென்றுள்ளது.

அப்போது, தனது வீட்டில் யாரும் இல்லை என்பதால், மகேந்திரன் அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதனால், அந்த சிறுமி அழுது துடித்துள்ளார். எனவே, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், அழுது கொண்டே வீட்டுக்கு திரும்பிய சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது, தனக்கு நடந்த கொடூரத்தை சிறுமி அழுதபடியே தெரிவித்துள்ளார். சித்தப்பா உறவு முறையுள்ள ஒருவரே இந்த கொடூரத்தில் ஈடுபட்டது அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆரணி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மகேந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், டியூஷனுக்கு வரும் மாணவிகள் சிலரிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்தது தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் எஸ்.மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி பெ.பார்த்தசாரதி, நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றத்துக்காக, வாலிபர் மகேந்திரனுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹3 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த மகேந்திரனை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 போக்சோ வழக்குகளில் முதியவர், வாலிபருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories: