ஓடஓட 2 வாலிபர்களுக்கு சரமாரி கத்திவெட்டு 4 பேர் கும்பல் துணிகரம்: ஒருவர் கைது திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில்

திருவண்ணாமலை செப்.22: திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த வாலிபர்களை வழிமறித்து, 4 பேர் கொண்ட கும்பல் ஓட, ஓட சரமாரியாக வெட்டியது. திருவண்ணாமலை அடுத்த கிளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பன்னு என்ற பச்சையப்பன்(28). இவர், தனது நண்பர் அஜித் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலை அவலூர்பேட்டை நான்குமுனை சந்திப்பு பகுதி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், பச்சையப்பன், அஜித் ஆகிய இருவரையும் ஓட ஓட கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதனால், தலை மற்றும் கைகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த இருவரும் அருகில் இருந்த கடைக்குள் ஓடி தஞ்சம் அடைந்தனர்.

பின்னர், அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது. அவர்களது கைகளில் கத்தி இருந்ததால், பொதுமக்களும் விரட்டிச்சென்று பிடிக்கவில்லை. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விரைந்து சென்று, கத்தி வெட்டால் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பச்சையப்பன் மற்றும் அஜித் ஆகியயோரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக, திருவண்ணாமலை- அவலூர்பேட்டை ரோடு ஜன்னத் நகரை சேர்ந்த தவுலத்பாஷா மகன் தர்வீஸ்(25) என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: