விபத்து சம்பவங்கள் அதிகரிப்பு பைக்குகளில் மாணவர்கள் அதிவேக பயணம்

வடலூர், செப். 23:  வடலூரில் பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் அதிவேமாக செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. மாணவர்களின் உயிரிழப்பை தடுக்க போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  வடலூரில் பள்ளி மாணவர்கள் சைக்கிள் ஓட்டுவது படிப்படியாக குறைந்து, பைக் ஓட்டுவது அதிகரித்துள்ளது. வாகன எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. வாகன பெருக்கத்திற்கேற்ப சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. சில பெற்றோர்கள் பெருமைக்காக தங்கள் பிள்ளைகளிடம் அதிவேக திறன் கொண்ட பைக்கை வாங்கி கொடுத்து ஓட்ட விடுகின்றனர். மாணவர்கள் ஒரே வாகனத்தில் 2 அல்லது 3 பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக செல்கின்றனர். அதுமட்டுமின்றி பைக்கில் சாகசங்கள் செய்கின்றனர். போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமல் சிறுவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். வாகன நெரிசல் அதிகமாக உள்ள சாலையில் கூட, வேகமாக செல்கின்றனர். இதனால், சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

 இதனை போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். இதனால், கடந்த மாதம் வடலூர் நான்கு முனை சந்திப்பில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் மினி டெம்போ  மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் பள்ளி மாணவர்கள் தினமும் ஒருவராவது விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது. எனவே, காலம் தாழ்த்தாமல் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க வேண்டும். இதை மீறும் மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவர்களின் பெற்றோர்கள் மீதும் திருத்தப்பட்ட வாகன சட்டத்தின் படி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளிடம் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பள்ளிகளுக்கு இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் அறிவுரை வழங்கி போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: