சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 70 சதவீதம் நிறைவு சேதமடைந்த முக்கிய சாலைகளை அக்.20க்குள் சீரமைக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை, செப்.23: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த பணிகளால் சேதமடைந்த  சாலைகளை அக்டோபர் 20ம் தேதிக்குள் சீரமைக்க வேண்டும், என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மழைகாலம் வந்தாலே சென்னையின் பல பகுதிகள் மழைநீரில் தத்தளிப்பதை தடுக்கப்படும், என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் புதிதாக வடிகால்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக இந்த பணிகளை முடித்தாக வேண்டும் என்பதில் சென்னை மாநகராட்சி தீவிரமாக களம் இறங்கியுள்ளது. மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்படும் குழிகளில் மின்வாரியம், குடிநீர் வாரியம் என பல்வேறு வாரியங்களின் குழாய்கள் செல்வதால் அவற்றை அகற்றிய பின்பே அந்த இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள முடிகிறது.

இதனால் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வது மிகுந்த சவாலாகவே இருந்து வருகிறது. இருந்தாலும் அவற்றை சரி செய்து மழைநீர் வடிகால் பணிகளை வேகப்படுத்தும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி பணியாற்றி வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கிமீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கிமீ நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியில் 1.05 கிமீ நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் ரூ.3,220 கோடியில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின் கீழ் கோவளம் வடிநில பகுதிகளில் ரூ.1,714 கோடியில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீத அளவில் நிறைவடைந்துள்ளது. மற்ற திட்டப் பணிகள் அனைத்தும் 60 முதல் 70 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை வேகமாக முடிக்கவும் உத்தரவிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.  சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் சாலைகள் மிகுந்த சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால், மழைக்காலத்தில் விபத்து அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் வடிகால் பணிகள் எங்கெங்கு முடிவடைந்துள்ளதோ அந்த பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மழைநீர் வடிகால் திட்ட பணிகள் முடிந்த இடத்தில் சேதமடைந்த சாலைகளை அக்.20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். இதில், மழைநீர் வடிகால்களை சுற்றி எந்த அளவு சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

அதேநேரம், பருவமழைக்கு முன்பு பணிகள் முடிவடையாதபட்சத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி துரிதப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில், வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அப்பணிகள் முழுமை அடையாததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 400 இடங்களில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் சேகரமாகும் கிணறுகளை துார்வாரி வண்டல்கள் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மோட்டார் பம்புகளை இயக்கி சரிபார்த்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் மூழ்கிய சுரங்கப்பாதைகளில் கூடுதல் மோட்டார் பம்புகள் அமைக்க வேண்டும். மரக்கிளைகள் அகற்றுதல் உபகரணங்களை முன்பராமரிப்பு செய்து தயார் நிலையில் வைத்தல், சாலை வடிகட்டி தொட்டிகளில் இருந்து மழைநீர் வடிகால்களுக்கு செல்லும் இணைப்பு குழாய்களில் அடைப்புகள் ஏதுமின்றி பராமரிக்க வேண்டும்.

நீர்வரத்து கால்வாய்கள் சேரும் இடங்களில் தங்கு தடையின்றி மழைநீர் செல்வதை உறுதி செய்தல் போன்ற பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மழைநீர் வடிகால் பணியால் சேதமடைந்த 200 கி.மீ., சாலைகள் சீரமைக்கும் பணியும் தொடங்கியுள்ளன. இப்பணிகளை வரும் 20ம் தேதிக்குள் முடிக்க சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மின்சார வாரியம், மெட்ரோ, குடிநீர் வாரியம் போன்ற பணிகள் முழுமையடைந்த சாலைகளையும் பருவ மழைக்கு முன் சீரமைக்க அந்தந்த துறைகளுக்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: