கிருஷ்ணகிரி, ஓசூரில் ஆன்லைனில் 2 பேரிடம் ரூ.5 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, செப்.23:  கிருஷ்ணகிரி, ஓசூரில் 2 பேரிடம் ஆன்லைனில் ரூ.5 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி செந்தில்நகரை சேர்ந்தவர் சிவசங்கர் (43). இவர் பத்திரப்பதிவு ஆவணங்கள் தயார் செய்யும் அலுவலகம் நடத்தி வருகிறார். இவரது செல்போனுக்கு தனியார் பேப்பர் கம்பெனியில் இருந்து பேசுவதாக கூறி தொடர்பு கொண்ட நபர்கள், ‘உங்களுக்கு தேவைப்படும் பேப்பரை பாதி விலைக்கு தருகிறோம். முதலில் அட்வான்ஸ் மட்டும் செலுத்துங்கள்,’ என கூறியுள்ளனர். இதேபோல் 3 முறை அவருக்கு போன் வந்ததால், சிவசங்கரும் பேப்பர் வாங்கி கொள்வதாக கூறி, ரூ.3 லட்சத்து 2,240 ரூபாயை அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி பேப்பர் அனுப்பி வைக்கவில்லை. பின்னர், அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவசங்கர், இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், ஓசூர் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் தேவராஜ். தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மெயிலுக்கு, சவுதி அரேபியாவில் அதிக சம்பளத்துக்கு வேலை இருப்பதாக கூறி தகவல் வந்துள்ளது. அதனை நம்பிய தேவராஜ், அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, அதிக சம்பளம் வழங்கப்படும் என்றும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனை நம்பிய அவர், அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் அவரிடம் தொடர்ந்து பேசி வந்த அந்த நபர்கள், சமீப காலமாக தொடர்பை துண்டித்து விட்டனர். செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம், தேவராஜ் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: