தமிழக அளவில் கிருஷ்ணகிரி முதலிடம் சிறுவர்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தி சாதனை

கிருஷ்ணகிரி, செப்.23:  தமிழக அளவில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதில், கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கம் அதிகரித்து, அனைத்து தரப்பு மக்களையும் முடக்கியது. கடந்த 2020ம் ஆண்டு இறுதியில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, மதுரை மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு, சுகாதாரத் துறையினனர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. இம்மாவட்டத்தில் 2011ம் ஆண்டு நடந்த மக்கள் கணக்கெடுப்பின் படி, மொத்தம் 19 லட்சத்து 82 ஆயிரத்து 842 பேர் உள்ளனர்.

இதில், 16 லட்சத்து 44 ஆயிரத்து 200 பேர் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்கள் ஆவர். 18 வயதிற்கு மேற்பட்ட 15 லட்சத்து 2,400 பேரில், 93.5 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி 88.88 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதே போல, 15 வயது முதல் 17 வயதிற்குட்பட்ட 86 ஆயிரத்து 800 பேரில், 90.92 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும்,  75.2 சதவீதம் பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். இது மற்ற மாவட்டங்களை விட அதிகமாகும். இதுதவிர, 12 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் 55 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 102 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 73 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே, 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, 102 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி, முன்னோடி மாவட்டமாக கிருஷ்ணகிரி திகழ்கிறது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள், மாவட்டத்தில் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் மட்டுமே. அதே போல இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்கள் 2 லட்சத்து 4 ஆயிரம் பேர். பூஸ்டர் டோஸ் போட வேண்டிய 9 லட்சத்து 12,101 பேரில், இதுவரை 2 லட்சத்து 16,173 பேர் செலுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழக அரசு வரும் 30ம் தேதி வரை, பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியானவர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா பாதிப்பில் பெரிய நகரங்களுக்கு அடுத்தபடியாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், தற்போது தடுப்பூசி நடவடிக்கைகளில் 15வது இடத்திற்கு முன்னேறியதோடு, 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. தற்போது வரை 52,790 தடுப்பூசிகள் கைவசம் உள்ள நிலையில், மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை. தடுப்பூசி செலுத்தி கொள்ளாதோர், 2வது தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை விரைந்து போட்டுக் கொண்டால், கிருஷ்ணகிரி மாவட்டம் அனைத்து பிரிவுகளிலும் முதல் இடத்திற்கு முன்னேறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: