அரசு உயர்நிலை பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருச்செங்கோடு, செப்.23:  திருச்செங்கோடு அருகே, அரசு உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருச்செங்கோடு ஒன்றியம், வரகூராம்பட்டி ஊராட்சி கருமகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். மேலும், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் உள்ள மாணவர்களின் விவரங்களை கேட்டு, அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்குமாறும் அறிவுறுத்தினார். மேலும், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர், கருமகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் குழந்தைகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

 மேலும், குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து உயர்நிலை பள்ளி சத்துணவு கூடத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்க சமைக்கப்பட்ட சத்துணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். திருச்செங்கோடு ஒன்றியம், வரகூராம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை ஆய்வு செய்தார். முன்னதாக திருச்செங்கோடு வட்டத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், மகளிர் வாழ்வாதார சேவை மைய அலுவலகத்தை திறந்து வைத்து, மகளிர் சுயஉதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, பிடிஓ.,க்கள் கிரிஜா, டேவிட் அமல்ராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: