பொதுமக்கள் திடீர் மறியல்

பரமத்திவேலூர், செப்.23:பரமத்திவேலூரை அடுத்துள்ள எல்லமேடு அருகே உள்ளது மங்கலமேடு. இப்பகுதியில் நான்கு தெருக்களில் ஏற்கனவே போடப்பட்டிருந்த தார் சாலையை பெயர்த்து விட்டு, ஜல்லிகள் கொட்டி ஒரு வருடத்திற்கு மேலாகியும் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை. சாலையில் ஜல்லிகள் கிடப்பதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.  இச்சாலையில் குடிநீர் இணைப்பிற்காக பறித்த குழிகளையும் ஓலப்பாளையம் ஊராட்சியினர் சரிவர மூடப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சியிடம் பலமுறை முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்களே குழந்தைகளின் பாதுகாப்பு கருதி குழிகளை முடினர்.

இந்நிலையில், பறித்து போட்ட சாலைகளை சீரமைத்தும், சாலையோர குழிகளை சரிசெய்து தரக்கோரி, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று, பரமத்திவேலூர்-மோகனூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வேலூர் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையிலான போலீசார், ஊராட்சி மன்ற தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இன்னும் ஓரிரு நாட்களில் பணிகளை தொடங்கி சாலை அமைத்து தருவதாக உறுதிளித்தனர். அதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஒருமணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்புக்கப்பட்டது.

Related Stories: