ஆண்டிற்கு ரூ.150 கட்டணம் செலுத்தி நாய்களுக்கு லைசென்ஸ் பெற வேண்டும்

நாமக்கல், செப்.23: பொது இடங்களில் நாய்கள் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தால், அதன் உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், நாய்களுக்கு லைசென்ஸ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சி பகுதியில், தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை நிலவுகிறது. நாய்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றை பிடித்து அப்புறப்படுத்த, கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலர்களிடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். நாமக்கல் நகராட்சியால் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நகராட்சி பகுதியில் 512 தெரு நாய்கள் உள்ளன. இதில் 134 தெருநாய்களுக்கு கருத்தடை ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது.

நாய்களை கருத்தடை ஆபரேசனுக்காக நகராட்சி பணியாளர்கள் பிடிக்க முயற்சிக்கும் போது, அந்த நாய்களுக்கு சிலர் உரிமை கோருகிறார்கள். இதனால் நகராட்சி பகுதியில், தெருநாய்களின் தொல்லையை முற்றிலுமாக ஒழிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, நாய்களை வளர்க்கும் பொதுமக்கள், பாதுகாப்பாக தங்களது இல்லங்களில் வைத்து பராமரிக்கவேண்டும். நாய்களால் பொதுமக்களுக்கு தொந்தரவு வரக்கூடாது என நகராட்சி அலுவலர்கள், நாய் உரிமையாளர்களை தொடர்ந்து அறிவுறுத்தியபோதும், அதை யாரும் கண்டுகொள்ளவிலலை. இதனால் தெரு நாய்களால் பாதிக்கப்படுபவர்களின் நிலை தொடர் கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாய்களுக்கு லைசென்ஸ் முறையை நகராட்சி நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா கூறியதாவது: நாமக்கல் நகராட்சியில் விலங்குகள், பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகள் (நாய்கள்) வளர்ப்பவர்கள் மற்றும் வியாபார நோக்கத்துக்காக பராமரித்து வருபவர்கள், நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிய லைசென்ஸ் பெற்றுக் கொள்ளவேண்டும்.

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி அதற்கான டாக்டர்கள் சான்றிதழை காட்டி, விண்ணப்பிக்க வேண்டும். ஒரு விலங்கிற்கு ரூ.150 லைசென்ஸ் கட்டணமாக செலுத்தவேண்டும். ஆண்டுதோறும் இந்த லைசென்சை புதுப்பித்து வரவேண்டும். விலங்குகள் மற்றும் பறவைகள் கட்டுப்பாடு சட்டப்படி, விலங்குகள் மற்றும் பறவைகளை தனியாக கொட்டகை அமைத்து பராமரிக்கவேண்டும். பொது இடங்களில் விட தடை விதிக்கப்படுகிறது. லைசென்ஸ் பெறாமலும், பொது இடங்களில் நாய்களை விட்டு சுகாதார கேடு மற்றும் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தால், அந்த நாய்கள் (விலங்குகள்) பறிமுதல் செய்யப்படும். மேலும், அதன் உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு நகராட்சி ஆணையாளர் சுதா தெரிவித்துள்ளார்.

Related Stories: