கொலு பொம்மைகள் விற்பனைக்கு குவிப்பு

சேலம், செப்.23: ஆயுதப்பூஜைக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு நவராத்திரி விழா தொடங்கும். இந்த ஒன்பது நாட்களிலும் வீடு, கோயில், பொது இடங்களில் கொலு பொம்மைகளை அமைத்து, சிறப்பு பஜனை பாடி படையிலிட்டு பக்தர்கள் வழிபாடு மேற்கொள்வார்கள். நடப்பாண்டு நவராத்திரி விழா வரும் (26ம் தேதி) தொடங்குகிறது. அக்.4ம் தேதி ஆயுதபூஜையும், 5ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பெரும்பாலான வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். கொலுவையொட்டி சேலம் ராஜாஜி காதி பவன், பூம்புகார் விற்பனை நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் கொலு பொம்மைகளை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். கல்யாண செட், முருகன், விநாயகர், நரசிம்மர், அத்திவரதர், அம்மன், லட்சுமி, சரஸ்வதி, சக்தி, நடராஜர், விவேகானந்தர், கிருஷ்ணன், குருவாயூரப்பன், ராமனுஜர், அனுமன், ஊஞ்சல் கிருஷ்ணன், கீதை உபதேசம், பெண்கள் வெண்ணை கடைதல், அரிசி குத்துதல், ராவணன் தர்பார், கோமாதா உள்பட பல்வேறு வகையான பொம்மைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பொம்மை குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.500 வரை விற்கப்படுகிறது. இதைதவிர கொலு பொம்மைகள் செட்டுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் ராஜாஜி காதிபவன் அதிகாரிகள் கூறுகையில், சேலம் சின்னகடைவீதி காந்தி ஆசிரம ராஜாஜி காதிபவனில் கொலு பொம்மை கண்காட்சி கடந்த 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. இக்கண்காட்சியில் மதுரை, காஞ்சிபுரம், வேலூர், கோலாப்பூர், கல்கத்தா, பாண்டிச்சேரி, கேரளா, கடலூர் மற்றும் பல ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கொலுபொம்மைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. அக்.5ம் தேதி வரை ரூ.3ஆயிரத்திற்கு குறையாமல் பொம்மைகளை வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுகிறது, என்றனர்.

Related Stories: