ரூ.15,130 கோடி கடன் வழங்க இலக்கு

சேலம், செப்.23:சேலம் மாவட்டத்தில் வேளாண்மை, தொழில் மையம், மகளிர் திட்டம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நடப்பாண்டு ரூ.15,130 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கிகளின் மாவட்ட அளவிலான இரண்டாம் காலாண்டிற்குரிய ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் 228 பொதுத்துறை வங்கி கிளைகள், 159 தனியார் வங்கிகள், தமிழ்நாடு கிராம வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளிட்ட 101 அரசு சார்ந்த வங்கிகள் என மொத்தம் 488 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வங்கிகள் மூலம் 2022-23 ஆண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.6,712.41 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 4,967 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.950 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.262.60 கோடி கடன் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ரூ.4.88 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.3.35 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் மூலம் ரூ.72 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.65.77 லட்சமும், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் ரூ.7.50 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.8.40 கோடியும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.2.84 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.6.35 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள், வங்கிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.

ஆர்வமுடன் தொழில் தொடங்க வரும் தொழில்முனைவோர்கள் மற்றும் கல்விக்கடன் கேட்டு வரும் மாணவ, மாணவிகளுக்கு வங்கிக்கடன் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் வங்கியாளர்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் மாவட்ட நிர்வாகம் வழங்கும். நடப்பாண்டில் (2022-23) வங்கிகள் மூலம் பல்வேறு திட்டங்களுக்காக கடன் வழங்கிட திட்ட இலக்காக ரூ.15,130 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இக்கடன் உதவிகளை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார். இக்கூட்டத்தில் அனைத்து வங்கிகளின் அதிகாரிகள், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: