மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் 1 லட்சம் புதிய குடிநீர் இணைப்பு

ஈரோடு, செப். 23:  ஈரோடு மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 6 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்புகளை இன்னும் 3 மாதத்தில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகள், 225 ஊராட்சிகளுக்கு காவிரி, பவானி ஆறுகளில் இருந்து குடிநீர் எடுத்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பவானி அடுத்துள்ள ஊராட்சிக்கோட்டை என்ற இடத்தில் காவிரி ஆற்றில் இருந்து குழாய்கள் அமைத்து தனிக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் மக்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது. இதேபோல பவானி நகராட்சி நிர்வாகம் தனியாக காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து மக்களுக்கு தினசரி விநியோகிக்கிறது. கோபி, சத்தி மற்றும் புளியம்பட்டி நகராட்சிகள் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விநியோகித்து வருகின்றது.

மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களை தவிர மாவட்டத்தில் உள்ள பிற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் கூட்டு குடிநீர் திட்டங்களை மட்டுமே முழுமையாக நம்பி உள்ளது. கூட்டுக்குடிநீர் திட்டங்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்துகிறது. வாரியம் மூலம் பவானி, காவிரி ஆறுகளில் இருந்து மொத்தம் 41 கூட்டுகுடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மொத்த குடியிருப்புகளில் 59 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 41 சதவீத குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மும்முரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசுகளின் பங்களிப்புடன் ஒன்றிய அரசின் சார்பில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஜல்ஜீவன் என்னும் அனைவருக்கும் குடிநீர் இணைப்பு என்ற திட்டம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. வரும் 2024ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பங்களிப்புடன் நடக்கும் இத்திட்டத்தில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் வரை குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 59 சதவீத வீடுகளுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 6 ஆயிரம் குடியிருப்புகளுக்கு புதிய இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்தாண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் இணைப்புகள் அனைத்தும் 3 மாதத்துக்குள் வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதிகாரிகள் கூறினர். ஈரோடு மாவட்டத்தில் 59 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 41 சதவீத வீடுகளுக்கு 2024ம் ஆண்டுக்குள் வழங்கி முழுமையாக பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜல்ஜீவன் திட்டத்தில் இன்னும் 3 மாதத்தில் 1 லட்சத்து 6 ஆயிரம் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிட்டு, பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதால் அனைவருக்கும் 100 சதவீத குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்னும் புதிய நம்பிக்கை ஈரோடு மாவட்ட மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: