பரம்பிக்குளம் அணையில் நிபுணர் குழு ஆய்வு மதகு விரைவில் பொருத்த ஏற்பாடு நீர்மட்டம் 40 அடிக்கு குறைந்தவுடன் பராமரிப்பு பணி துவங்கும்

ஆனைமலை,செப்.23: பொள்ளாச்சியை அடுத்துள்ள பரம்பிக்குளம் அணையில், இரண்டாவது மதகு பகுதியை சென்னையிலிருந்து வந்த நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அணையின் நீர்மட்டம் 40 அடியை எட்டியவுடன் பராமரிப்பு பணிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளனர். கோவை, திருப்பூர், ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம். இந்த திட்டத்தில் சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட தொகுப்பு அணைகள் உள்ளன. இதில், குறிப்பாக பரம்பிக்குளம் அணை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பராமரிப்பு முழுவதும் தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணை சுமார் 17 டி.எம்.சி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததின் காரணமாக அணை நிரம்பிய நிலையில் இருந்தது.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி நள்ளிரவு அணையின் மூன்று மதகுகளில், இரண்டாவது மதகின் மேல் உள்ள சுமார் 30 டன் எடை கொண்ட கவுண்டர் வெய்ட் மதகின் மீது எதிர்பாராதவிதமாக விழுந்ததின் காரணமாக, மதகு சேதம் அடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பாக அங்கிருந்த பணியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூன்று மதகுகள் வழியாக சுமார் 16,500 கன அடி தண்ணீரை வெளியேற்றினர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் அணைக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சென்னையில் இருந்து 5 பேர் கொண்ட அணை கட்டுமான நிபுணர் குழுவினர் பரம்பிக்குளம் அணையில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்று நிபுணர் குழு மற்றும் கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி உள்ளிட்ட அதிகாரிகள் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று முன்தினம் நிலவரப்படி 71 அடி உயரம் இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 64 அடியாக குறைந்தது. தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், பாலக்காடு மாவட்டம் சாலக்குடி ஆற்றங்கரையில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘அணையின் மதகு சீரமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னையிலிருந்து நிபுணர் குழுவினர் வந்துள்ளனர். 27 அடி உயரம் மற்றும் 40 அடி நீளம் கொண்ட மதகு சுமார் 35 டன் எடை கொண்டதாகும். மேலும், அதற்கு மேல் உள்ள கவுண்டர் வெயிட் எனப்படும் கருவி சுமார் 30டன் எடை கொண்டதாகும்.

ஆகவே இந்த மதகுக்கு தேவையான உதிரிகள் என அனைத்திற்கும் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், அணையின் நீர்மட்டம் 40 அடிக்கு குறைந்தால் மட்டுமே மதகு சீரமைப்பு பணிகள் செய்ய முடியும் என்பதால், முதல் கட்டமாக சீரமைப்பு பணிக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது. அரசு நிதி பெற்றவுடன் புதிய மதகு பொருத்தும் பணிகள் முழு வீச்சில் நடத்தப்படும். அதிகபட்சம் இரண்டு மாதத்திற்குள் இந்த பணிகள் முடிவடைந்து, எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின்போது அணை நீர் தேக்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்படும்’’ என்று தெரிவித்தனர். பிஏபி விவசாயி உடுக்கம்பாளையம் பரமசிவம் கூறுகையில், ‘‘பரம்பிக்குளம் ஆழியாறு  திட்டத்தில், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த பகுதிகளில் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறகிறது.

மேலும், பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. எதிர்பாராத ஒரு நிகழ்வாக பரம்பிக்குளம் அணையில் இருக்கின்ற மதகு சேதமாகி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த விபத்து காரணமாக 2 சுற்று தண்ணீர் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே போர்க்கால அடிப்படையிலே இந்த மதகுகளை சீரமைப்பது மட்டுமல்ல இனி வருங்காலத்தில் இம்மாதிரியான இழப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.

Related Stories: