கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் மனநல நல்லாதரவு மன்றம் துவக்கம்

கோவை, செப்.23: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் மனநல நல்லாதரவு மன்றம் நேற்று துவக்கப்பட்டது. தேசிய சுகாதார இயக்கம் (என்.எச்.எம்) மருத்துவ மாணவர்களின் தற்கொலையை தடுக்க அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் மனநல நல்லாதரவு மன்றம் அமைக்க அறிவுறுத்தியுள்ளது. தேசிய குற்றவியல் ஆவணப்படி ஆண்டுதோறும் 8.2 சதவீத மாணவர்கள் தற்கொலையால் இறக்கின்றனர். மாணவர்களின் பதற்றத்தை நீக்கி, எதிர்கால சவால்களை அவர்கள் கையாளும் வகையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் மனம் என்று அழைக்கப்படும் மனநல நல்லாதரவு மன்றம் துவக்கப்பட்டுள்ளது. விழாவில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்கள் தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், போதை பொருள் பயன்படுத்த கூடாது.

வாகனம் இயக்கும்போது சாலை விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஹெல்மெட் அணிய வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.இது குறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: தேசிய சுகாதார இயக்கம் அறிவுறுத்தலின் பேரில் மனம் என்ற மனநல நல்லாதரவு மன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மானிட்டரிங் கமிட்டி மற்றும் எம்பவர்மென்ட் கமிட்டி என இரண்டு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில், மானிட்டரிங் கமிட்டியில் டீன், மருத்துவமனை கண்காணிப்பாளர், பேராசிரியர்கள், விடுதி வார்டன்கள், மாணவர்கள் இருப்பர். எம்பவர்மென்ட் கமிட்டியில், மாணவர் பிரநிதிகள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் இருப்பர். இந்த கமிட்டியில் உள்ள மாணவ பிரதிநிதிகள் தூதுவர் என அழைக்கப்படுவர்.

இவர்கள், மனஅழுத்தம் உள்ள மாணவர்களை கண்டறிந்து கமிட்டி உறுப்பினர்களிடம் தெரிவிப்பர். பின்னர், சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு மனநலம் தொடர்பான ஆலோசனை வழங்கப்படும். இக்கமிட்டி மாதம் ஒரு முறை கூட்டம் நடத்தி மாணவர்களின் பிரச்னைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தும். மானிட்டரிங் கமிட்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் நடத்தும். நோடல் ஆபிசராக டாக்டர் நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மனநலத்துறையின் கட்டுபாட்டில் இந்த மன்றம் செயல்படும். மேலும், மாணவர்கள் மனநலம் தொடர்பான ஆலோசனை பெற 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்படும் மாணவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: