குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் திடீர் தர்ணா போராட்டம்

குன்னூர்,செப்.23: குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்பந்த பணிகளை வெளி ஆட்களுக்கு வழங்குவதாக உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டியதோடு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பணியாற்றி வருகின்றார். இவர்கள் குன்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், புதிய சாலை அமைக்கும் பணி, சமுதாய கூடம் அமைத்தல் போன்ற பணிகளை டெண்டர் எடுத்து பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் குன்னூரில் உள்ள ஊராட்சி பள்ளிகளுக்கு பராமரிப்பு மற்றும் வண்ணங்கள் பூசும் பணிகளுக்காக  ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு தராமல் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்தம் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை கண்டித்து திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு 20க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இது தொடர்பாக மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முடிவு செய்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களை அழைத்து நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் இனி வரும் காலங்களில் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒப்பந்ததாரர்கள் கலைந்து சென்றனர். இதனால் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சமீப காலமாக டெண்டர் எடுத்து வளர்ச்சித் திட்ட பணிகளை மேற்கொள்வதில் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: