கூடலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தை ஊட்டிக்கு மாற்றும் திட்டத்தை திரும்ப பெறக் கோரிக்கை

கூடலூர்,செப்.23: சிபிஐ கட்சியின் கூடலூர் ஒன்றிய செயலாளர் முகம்மது கனி முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் நீலகிரி எம்.பி., ஆ ராசாவுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களை சீரமைப்பு செய்து பட்டியல் வெளியிட்டுள்ளது.அதில் நீலகிரி மாவட்டம் கூடலூர் கல்வி மாவட்டத்தை நீலகிரி மாவட்டமாக மாற்றி அதன் அலுவலகத்தை ஊட்டிக்கு மாற்ற உள்ளதாக அறிந்தோம். கூடலூர் பகுதியில் மாவட்ட கல்வி  அலுவலகம்   கடந்த 1997 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போதைய இந்த உத்தரவு மலை மாவட்டமான நீலகிரியில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கூடலூர்  கல்வி மாவட்டத்தில் வாழும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.

சமவெளிப் பகுதியைப் போல அல்லாமல் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காவில் பயண நேரம் அதிகமாக  உள்ளது.கூடலூர் கல்வி மாவட்டத்தின் எல்லை  சுமார் 50 கி.மீ தொலைவு வரை உள்ளது. 25 அரசு உயர்நிலைப் பள்ளிகளும் 12 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் 20க்கும் மேற்பட்ட தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. பெரும்பாலும் தோட்டப் பகுதிகளாகவும் பேருந்து வசதிகள் மிகவும் குறைவாகவும் உள்ள பகுதிகளாகும். இந்நிலையில் உதகைக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தை மாற்றுவதன் மூலம் கூடலூர் நகரில் இருந்து  மேலும்  50 கிலோ மீட்டர் பயணம் செய்யும் நிலை ஏற்படும். இதனால் கல்வி சார்ந்த ஆய்வு பணிகள்,மேம்பாட்டு பணிகள்,வளர்ச்சி பணிகள்,தேர்வு சம்பந்தப்பட்ட பணிகள்,மாணவர்கள் சான்றுகள் தொலைந்தது மற்றும் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மேலும் அலைச்சலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் தொடர்பான அலுவல் பணிகளுக்காக  ஆசிரியர்கள் ஊட்டி சென்று வர ஒரு நாள் ஆகி விடும்.  

இதனால் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் பணிகள் பாதிக்கும் என்பதும், பள்ளிகளில் இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கல்வித்துறை கண்காணிப்பு பணிகளும் அரசு திட்டங்கள் சென்று சேருதல் மற்றும் அரசு பள்ளிகளின் மேம்பாடு என்பது மேலும் பாதிக்க கூடியதாக அமைகிறது. எனவே மலைப் பகுதியான கூடலூரின் போக்குவரத்து மற்றும் பயண நேரங்களால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளைப் பரிசீலனை செய்து மேற்கூறிய உத்தரவில் இருந்து   கூடலூர் கல்வி மாவட்டத்தினை விடுவிக்க வேண்டும் எனவும்  தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலகத்தை கூடலூரிலேயே செயல்படுத்திட வேண்டும். கூடலூர் - பந்தலூர் பகுதிகளில் கல்வி மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: