வேலூர் மாவட்டத்தில் நடந்தது காய்ச்சல் கண்டறிய 140 இடங்களில் சிறப்பு முகாம் ஆர்வத்துடன் பரிசோதனை செய்து கொண்ட பொதுமக்கள்

வேலூர், செப்.22: வேலூர் மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறிய நேற்று 140 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. மழை காலங்களில் பாதிப்பு ஏற்படுவது வழக்கமானது தான். எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சறிப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர்கள் அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால் 1 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அளித்துள்ளது. புதுச்சேரியில் நேற்று முன்தினம் 830 பேருக்கு காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை காய்ச்சலை கட்டுப்படுத்தும் முறையில் தீவிரம் காட்டியுள்ளது. மேலும் தமிழகத்தில் நேற்று 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நேற்று 140 இடங்களில் காய்ச்சல் கண்டறிய சிறப்பு முகாம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் குறித்து பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி, டாக்டர்கள் அறிவுரை வழங்கினார். வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு காய்ச்சல் கண்டறிய முகாம் நடந்தது. மாவட்டத்தில் நேற்று நடந்த காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காட்பாடி பிரம்மபுரத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, நேரில் ஆய்வு செய்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் மருந்து, மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் கொசு மருந்து அடிப்பவர்களை பிற்பகல் நேரத்தில் அடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறிய 140 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது. மேலும் 25 நாடாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்கள் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த நடமாடும் வாகனத்தில் 25 டாக்டர்கள், நர்ஸ் உள்ளிட்ட குழுவினர் காய்ச்சல் அதிகமாக காணப்படும் பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினார். காய்ச்சல் கண்டறியந்த பகுதிகளில் தொடர்ந்து, 3 நாட்களுக்கு முகாம் போடப்பட உள்ளது. மேலும் காய்ச்சல் அதிகமாக உள்ளவர்களை தனிமைப்படுத்த அறிவுரை, மருத்துவமனையில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

Related Stories: