திருச்சி மாநகரில் 28 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்

திருச்சி, செப்.22: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. மழை காலங்களில் பரவும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரம் காட்டியுள்ளது.

இந்த நிலையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சியில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவின்பேரில் மாநகரில் நேற்று முதல் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் உறையூர் பாண்டமங்கலம், காந்திபுரம் தேவர் காலனியில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் இப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். அதுபோல் ரங்கம் மண்டலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரங்கம் தேவி பள்ளி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மேலசித்திரை வீதியில் உள்ள ராஜன் பள்ளி, மேலூர் அய்யனார் பள்ளி, கிழக்கு ரங்கா பள்ளி உள்பட 8 இடங்கள் மற்றும் மாநகராட்சியில் 5 மண்டலங்களில் உள்ள 18 நகர்ப்புற சுகாதார மையங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்தது. முகாமில் அரசு டாக்டர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு உடல் பரிசோதனை செய்தனர். இந்த முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.

Related Stories: