திருச்சியில் 2 வீடுகளில் தீ விபத்து

திருச்சி, செப்.22: சென்னையில் வங்கியில் மேலாளராக பணிபுரியும் கோவிந்தராஜன் என்பவருக்கு சொந்தமான வீடு திருச்சி சின்ன சவுராஷ்ட்ரா தெரு பகுதியில் உள்ளது. முதல் மாடியில் உள்ள 2 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். ஒரு வீட்டில் தியாகராஜன் என்பவரும் மற்றொரு வீட்டில் வினோத் என்பவரும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று 2 வீடுகளில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்தனர். இதனால் யாரும் இல்லாத நிலையில் காலை 11.30 மணியளவில் அந்த இரண்டு வீட்டிலிருந்தும் கரும்புகை வந்தது. அதனை தொடர்ந்து தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலையடுத்து முதலில் ஒரு தீயணைப்பு வாகனம் வந்தது. தீ தொடர்ந்து எரிந்ததால் மேலும் ஓரு வாகனமும் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மிகவும் குறுகிய தெருவில் வீடு அமைந்திருந்ததால் சிரமப்பட்டு போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த கட்டில், மெத்தை மற்றும் தளவாட பொருட்கள் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் என கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் நல்லவேளையாக உயிர்சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: