குற்றப்பின்னணி உள்ளவர்களை அடையாளம் காண திருவண்ணாமலையில் தங்கியுள்ள சாமியார்களின் கைரேகை விபரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம் எஸ்பி முன்னிலையில் கிரிவலப்பாதையில் நடந்தது

திருவண்ணாமலை, செப்.22: திருவண்ணாமலையில் தங்கியுள்ள சாமியார்களின் கைரேகை உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்கும் பணி நேற்று தொடங்கியது. அதையொட்டி, எஸ்பி முன்னிலையில் விபரங்கள் சேகரிக்கப்பட்டன. திருவண்ணாமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரமாக விளங்குகிறது. எனவே, அண்ணாமலையார் கோயில், கிரிவலப்பாதை மற்றும் ஆசிரம பகுதிகளில் நூற்றுக்கணக்கான சாமியார்கள் நிரந்தரமாக தங்கியுள்ளனர். ஆன்மிக அமைப்புகள், ஆசிரமங்கள், தன்வார்வலர்கள் மூலம் தொடர்ந்து சாமியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மூலம் சாமியார்களின் தேவைகள் பூர்த்தியாகிறது. எனவே, திருவண்ணாமலை நகரம் சாமியார்கள் விரும்பும் இடமாக மாறியிருக்கிறது.

இந்நிலையில், ஆன்மிக நோக்கத்துடன் இங்கு தங்கியுள்ள சாமியார்களுக்கு மத்தியில், குற்றப்பின்னணி உள்ளதால், வெளியூர்களில் இருந்து இங்கு வந்து தங்கியிருக்கும் ஒரு சில சாமியார்களால் அடிக்கடி சர்ச்சைகள் ஏற்படுகின்றன. மேலும், ஒருசிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. எனவே, சாமியார்களின் விபரங்களை முறையாக பதிவு செய்து, அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சாமியார்களின் விபரங்களை முறைப்படுத்துவதன் மூலம், உண்மையான சாதுக்களுக்கு தேவையான தங்கும் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் தங்கியுள்ள சாமியார்களின் கைரேகை, முகவரி, புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்கும் பணி நேற்று நடந்தது.

அதையொட்டி, கிரிவலப்பாதையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு முகாமில், எஸ்பி கார்த்திகேயன் முன்னிலையில், சாமியார்களின் பெயர், முகவரி, குடும்ப பின்னணி, புகைப்படம், கைரேகை உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது, டவுன் டிஎஸ்பி குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இது குறித்து, எஸ்பி கார்த்திகேயன் கூறுகையில், ‘திருவண்ணாமலையில் தங்கியுள்ள சாதுக்களின் கைரேகை உள்ளிட்ட விபரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் கியூஆர் கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்க இருக்கிறோம். இந்த விபரங்களை டேட்டா பேஸ் எனும் நவீன முறையில் ஒப்பீடு செய்ய இருக்கிறோம். அதன்மூலம், குற்றப்பின்னணி உள்ளவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். குற்றப்பின்னணி இல்லாதவர்களுக்கு முறையான அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்களுக்கான தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் செய்துத்தரப்படும். தொடர்ந்து இங்கு சாதுக்கள் வருவதால், இது போன்ற முகாம்களை மாதந்தோறும் நடத்த திட்டமிட்டுள்ளோம். சாதுக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்த நடைமுறை பயன்படும்’ என்றார்.

Related Stories: